ரூ.125 கடனை திருப்பி தராத தொழிலாளி படுகொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது


ரூ.125 கடனை திருப்பி தராத தொழிலாளி படுகொலை - வெறிச்செயலில் ஈடுபட்ட நண்பர் கைது
x
தினத்தந்தி 29 Nov 2019 11:15 PM GMT (Updated: 29 Nov 2019 8:17 PM GMT)

சென்னை கே.கே.நகரில் 125 ரூபாய் கடனுக்காக கட்டுமான தொழிலாளியை பீர் பாட்டிலால் குத்திக்கொன்ற அவரது நண்பர் கைது செய்யப்பட்டார்.

சென்னை, 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 40). சென்னை கே.கே.நகர் சண்முகம் சாலையில் பிளாட்பாரத்தில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தார்.

இவரது நண்பரான விழுப்புரத்தை சேர்ந்த சிவகுமார் என்பவரும் பிளாட்பாரத்தில் தங்கியிருந்து கட்டுமான வேலை செய்து வந்தார். ராபர்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிவகுமாரிடம் 250 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இதில் 125 ரூபாய் திருப்பி கொடுத்துவிட்டார். மீதி பணத்தை கொடுக்கவில்லை.

மீதி பணம் 125 ரூபாய்க்காக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் இந்த பண விவகாரம் தொடர்பாக குடிபோதையில் மோதிக்கொண்டனர். ராபர்ட், சிவகுமாரை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த சிவகுமார் அருகில் கிடந்த பீர் பாட்டிலை எடுத்து உடைத்து ராபர்ட்டின் கழுத்தில் குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயம் அடைந்த ராபர்ட் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அசோக்நகர் போலீஸ் உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், கே.கே.நகர் இன்ஸ்பெக்டர் சிவகுமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

ராபர்ட்டின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை கொலை செய்த சிவகுமார் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக மற்றொருவரையும் போலீசார் தேடி வருகிறார்கள்.

*பூந்தமல்லியில் இருந்து கொரட்டூருக்கு ஆட்டோவில் சவாரி சென்ற அனிஷ்(22) மற்றும் அவரது நண்பரை கையால் தாக்கி மிரட்டி ரூ.8100-ஐ பறித்த ஆட்டோ டிரைவர் சுகுமார்(32), அவருடைய நண்பர் குப்புசாமி(39) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

*போரூர் காரம்பாக்கம் பகுதியில் கஞ்சா விற்ற காமேஷ்(19), கார்த்திக்(21) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

*திருவொற்றியூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற சீனியம்மாள் என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

*ஓட்டேரி பகுதியில் போலீசார் அமைத்து இருந்த 4 அதிநவீன கண்காணிப்பு கேமராக்களை உடைத்து சேதப்படுத்திய நவீன்(28), அஜய்(20), சந்தோஷ்(19), செல்வராஜ்(21), சஞ்சய்குமார்(20) உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

*கொலை வழக்கில் கைதான பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி(40) யை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.

* லண்டனில் வேலை செய்து வரும் பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஓம்பிரகாஷ் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச்சென்று விட்டனர்.

Next Story