பட்டினப்பாக்கத்தில் கடல் அலையில் பொங்கி வந்த திடீர் நுரையால் பரபரப்பு - மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு


பட்டினப்பாக்கத்தில் கடல் அலையில் பொங்கி வந்த திடீர் நுரையால் பரபரப்பு - மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 30 Nov 2019 3:45 AM IST (Updated: 30 Nov 2019 1:47 AM IST)
t-max-icont-min-icon

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை கடல் அலை நீரில் திடீரென நுரை பொங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பகுதியில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வு செய்து கடல்நீரின் மாதிரியை சேகரித்தனர்.

சென்னை, 

சென்னை மெரினா கடற்கரையில், கடல்நீர் உள்வாங்குவது உள்ளிட்ட பல்வேறு அசாதாரணமான சம்பவங்கள் அவ்வப்போது நடந்த வண்ணம் உள்ளது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் மெரினா கடற்கரை இரவு நேரத்தில் நீல நிறத்தில் ஜொலித்தது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கு கடல்சார் ஆராச்சியாளர்கள் பல்வேறு கருத்துகளை கூறினர். இந்தநிலையில் நேற்று அதிகாலை சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் கடல் அலைகளில் திடீரென நுரை பொங்கி வரத்தொடங்கியது. இந்த நுரைகள் பட்டினப்பாக்கம் கடற்பகுதியில் பனிக்குவியல் போன்று காட்சி அளித்தது.

இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. கடற்கரையில் பனிபோல் நுரைகள் காணப்படுவதை கேள்விப்பட்ட அப்பகுதி மக்கள் அதைக்காண குவிந்தனர்.

மேலும் அந்த பகுதியில் உள்ள சிறுவர்கள் வித்தியாசமாக நுரைகளை கண்டதும், அங்கும் இங்கும் குதூகலமாக ஓடி விளையாடத் தொடங்கினர். இந்த நிலையில், கடலில் வித்தியாசமாக நுரை வருவதற்கான காரணம் என்ன? என்று தெரியாமல் அனைவரும் விழித்தனர். அப்போது, கடலில் உள்ள கழிவுகளின் அளவு அதிகரித்ததே இதற்கு காரணம் என்று சிலர் கருத்து கூறினர்.

இதைத்தொடர்ந்து பட்டினப்பாக்கம் கடற்கரையில் நுரை வருவது குறித்து தகவல் அறிந்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று மாலை அங்கு விரைந்து வந்தனர். பின்னர் பட்டினப்பாக்கம் கடற்கரை பகுதியை ஆய்வு செய்து, அதில் உள்ள கடல்நீரின் மாதிரிகள் மற்றும் நுரைகளின் மாதிரிகளை சேகரித்தனர்.

இதுகுறித்து மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சேகரிக்கப்பட்ட கடல்நீர் மற்றும் நுரை மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம். இந்த ஆய்வின் முடிவு வருவதற்கு 5 முதல் 7 நாட்கள் வரை ஆகும். அதன்பின்னர் கடல் நீரில் நுரை வருவதற்கான காரணம் குறித்து தெரியவரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், நேற்று காலை அதிக அளவில் காணப்பட்ட நுரை அளவு மாலை நேரத்தில் சற்று குறைந்தே காணப்பட்டது.

Next Story