ஆர்.எஸ்.மங்கலத்திற்கு வைகை தண்ணீர் கேட்டு முற்றுகை - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்


ஆர்.எஸ்.மங்கலத்திற்கு வைகை தண்ணீர் கேட்டு முற்றுகை - விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கூச்சல்-குழப்பம்
x
தினத்தந்தி 30 Nov 2019 4:00 AM IST (Updated: 30 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய்க்கு வைகை தண்ணீர் திறந்துவிடவில்லை என்று கூறி முற்றுகையிட்டு கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கலெக்டர் நேர்முக உதவியாளர் தனுஷ்கோடி தலைமையில் நடைபெற்றது. விவசாய துணை இயக்குனர் சேக்அப்துல்லா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வெங்கிடகிருஷ்ணன், கூட்டுறவு இணை பதிவாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டம் தொடங்கியதும் ஏராளமான விவசாயிகள் வைகை அணையில் இருந்து விவசாயத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்பட்டும் அதிக பாசன பரப்பை கொண்டுள்ள ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறந்துவிடப்படவில்லை என்று குற்றம்சாட்டி கூச்சலிட்டனர். இந்த கருத்தை வலியுறுத்தி ஏராளமான விவசாயிகள் அதிகாரிகளை முற்றுகையிட்டு கூச்சலிட்டதோடு தங்களுக்கு தண்ணீர் தராமல் புறக்கணித்ததால் கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்ய முயன்றனர். அப்போது அதிகாரிகள் தண்ணீர் திறப்பது குறித்து விளக்குவதாக தெரிவித்தனர்.

பின்னர் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் கூறியதாவது:- வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதில் சிவகங்கைக்கு உரிய 20 சதவீத பங்கு தவிர மீதம் உள்ள தண்ணீர் சிறிதும் வீணாகாமல் 5 தடுப்பணைகளிலும் சரி சமமாக பிரித்து அனைத்து கண்மாய்களுக்கும் வழங்கியதோடு ராமநாதபுரம் பெரிய கண்மாயில் 4 அடி அளவிற்கு தண்ணீர் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு 1 சதவீதம் தான் தரவேண்டும் என்று விதி உள்ளது. விதிப்படி தண்ணீர் வழங்கிய நிலையில் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய்க்கு தண்ணீர் திறக்கக்கூடாது என்று பல வழிகளில் மிரட்டல்கள் வந்தன. வழக்கு தொடுப்பதாக மிரட்டினர். அதை பொருட்படுத்தாமல் அரசு விதிகளின்படி தண்ணீரை விவசாயத்திற்காக கொண்டு வந்து சேர்த்துள்ளோம்.

வைகை அணை நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருவதால் அணையில் தண்ணீர் சேர்ந்து வருகிறது. இதனால் இன்னும் 10 நாட்களில் மீண்டும் தண்ணீர் திறந்துவிட வாய்ப்பு உள்ளது.

இந்த கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் ஒன்றாக கூடி உள்ளீர்கள். நீங்கள் ஒற்றுமையாக மனம் முன்வந்து முடிவெடுத்து கூறுங்கள். இனி எடுக்கப்போகும் தண்ணீரை ஆற்றுப்பகுதி ஈரமாக உள்ளதால் சேதாரமில்லாமல் வேறு எங்கும் கொண்டு செல்லாமல் ஆர்.எஸ்.மங்கலம் கண்மாய் மற்றும் களரி கண்மாய்க்கு மட்டும் திறந்துவிட நாங்கள் தயார். மீதம் தண்ணீர் இருந்தால் ராமநாதபுரத்திற்கு கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு விவசாயிகள் மத்தியில் சம்மதம் என்பதற்கு ஏற்ப அமைதி ஏற்பட்டதால் அதன்படி செயல்படுவதென முடிவெடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில், பயிர்காப்பீடு செய்வதற்கு வேளாண்மை வங்கிகளில் மறுப்பதாக கூறி முற்றுகையிட்டு வலியுறுத்தினர். உடனடியாக அனைத்து இடங்களிலும் காப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Next Story