மாவட்டத்தில் பலத்த மழை, கண்மாய், ஊருணிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு


மாவட்டத்தில் பலத்த மழை, கண்மாய், ஊருணிகளுக்கு நீர் வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 3:30 AM IST (Updated: 30 Nov 2019 1:56 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் விடிய, விடிய பலத்த மழை பெய்ததால் இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

சிவகங்கை,

தமிழகத்தில் தென்மாவட்டங்களில் தற்போது பருவ மழை பெய்து வருகிறது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் இந்த மழை நேற்று முன்தினம் விடிய, விடிய பெய்ததால் இங்குள்ள கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது. சிவகங்கை நகரில் நேற்று முன்தினம் இரவு முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்ததால், நகரில் தாழ்வான இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் இப்பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழ்நிலை உருவாகியது. இதேபோல் காரைக்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பள்ளத்தூர், கானாடுகாத்தான், சாக்கோட்டை, புதுவயல், கொத்தரி, தேவகோட்டை ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை நேற்று காலை 10 மணி வரை அவ்வப்போது பெய்து வந்தது. இதனால் காலை நேரத்தில் பள்ளி மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் மழையில் நனைந்தபடியே சென்றனர். இது தவிர இந்த பகுதியில் உள்ள கண்மாய், ஊருணி உள்ளிட்டவைகளுக்கும் மழைநீர் வரத் தொடங்கியதால் தற்போது நிரம்பி வருகிறது.

மேலும் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் பகுதி விவசாயிகள் தங்களது கிணற்று பாசனத்தை நம்பி கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெல் பயிரிட்டனர். தற்போது இந்த நெற்பயிர்கள் நெல் கட்டும் நிலையில் உள்ளது. இந்நிலையில் தொடர் மழையினால் சுமார் 10 ஏக்கரில் பயிரிடப்பட்ட வயல்களில் மழைநீர் புகுந்து, நெல் பயிர்கள் தரையில் சாய்ந்தது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்தனர். மேலும் மீன்பிடி ஆர்வலர்கள் அந்த பகுதியில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் தூண்டில் மூலம் மீன் பிடித்து வருகின்றனர். இதேபோல் தேவகோட்டை, கல்லல், திருப்பத்தூர், சிங்கம்புணரி, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் முதல் பலத்த மழை அவ்வப்போது பெய்து வருவதால் பல்வேறு இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த பகுதியில் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் உள்ளதால் மழைநீர் அந்த பகுதியில் உள்ள வயல்களில் புகுந்தது. இதேபோல் இளையான்குடி, காளையார்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சில இடங்களில் மழைநீர் செல்ல வழியில்லாமல் சாலைகளில் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

காரைக்குடி-27.4, சிவகங்கை-20, சிங்கம்புணரி-18.2, தேவகோட்டை-16.4, திருப்புவனம்-14.8, இளையான்குடி-11, காளையார்கோவில்-3.8, மானாமதுரை-2. இதில் அதிகபட்சம் காரைக்குடி பகுதியிலும், குறைந்தளவு மானாமதுரையிலும் மழை பதிவாகி உள்ளது.

Next Story