கண்மாயில் கழிவுகளை அகற்றக்கோரி, தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
காரியாபட்டி அருகே கண்மாயில் கழிவுகளை அகற்றக்கோரி தாலுகா அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே மாங்குளம் கிராமத்தில் மொச்சிபத்தி கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் அருகே கிரஷர் ஆலை உள்ளது. இந்த ஆலையில் இருந்து வெளிவரும் கெமிக்கல் கலவை கழிவுகளை மொச்சி பத்தி கண்மாயில்கொட்டி வருகின்றனர். இந்த கண்மாயில் கொட்டுவதால் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி தண்ணீரோடு கெமிக்கல் கழிவுகளும் கலந்து தண்ணீர் மாசுபடும் அபாயம் உள்ளது.
இதையடுத்து மொச்சி பத்தி கண்மாயில் கெமிக்கல் கழிவுகளை கொட்டி வருவதை நிறுத்தக்கோரியும் கொட்டிய கழிவுகளை அகற்றக்கோரி பலமுறை அதிகாரிகளிடம் கூறியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் காரியாபட்டி தாலுகா செயலாளர் குமராண்டி தலைமையில் கிராமமக்கள் காரியாபட்டி தாலுகா அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
அப்போது அந்த மக்கள் மொச்சி பத்தி கண்மாயில் கொட்டப்படும் கழிவுகளை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். பின்னர் தாங்கள் கொண்டு வந்திருந்த மனுவை தாலுகா அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முருகன், காரியாபட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அம்மாசி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story