பெங்களூரு மடிவாளாவில் தடயவியல் ஆய்வு கூடத்தில் வெடி விபத்து; 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம்


பெங்களூரு மடிவாளாவில் தடயவியல் ஆய்வு கூடத்தில் வெடி விபத்து; 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 30 Nov 2019 12:04 AM GMT (Updated: 30 Nov 2019 12:04 AM GMT)

பெங்களூரு மடிவாளாவில் உள்ள தடயவியல் ஆய்வுகூடத்தில் நடந்த வெடி விபத்தில் 2 விஞ்ஞானிகள் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். ராய்ச்சூரில் சிக்கிய வெடிப்பொருட்களை பரிசோதித்த போது இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு, 

பெங்களூரு மடிவாளாவில் தடயவியல் ஆய்வு கூடம் உள்ளது. இங்கு குற்ற வழக்குகளில் ஈடுபடுவோரிடம் இருந்து கைப்பற்றப்படும் பொருட்கள், தீவிரவாதிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் வெடிப்பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதுபோல, நேற்று மதியம் ராய்ச்சூர் மாவட்டத்தில் குப்பைகளில் கிடந்த வெடிப்பொருட்களை, ராய்ச்சூர் மேற்கு மண்டல போலீசார், பெங்களூருவில் உள்ள தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

அந்த வெடிப்பொருட்களை ஆய்வு செய்யும் பணியில் விஞ்ஞானி ஸ்ரீநாத் உள்ளிட்டோர் ஈடுபட்டு இருந்தனர். அங்குள்ள ஆய்வகத்தில் வெடிப்பொருட்களில் வேதிப்பொருட்களை கலந்து ஆய்வு நடந்ததாக தெரிகிறது. அப்போது திடீரென்று வேதிப்பொருட்கள் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், விஞ்ஞானிகள் ஸ்ரீநாத், நவ்யா உள்பட 6 பேர் பலத்தகாயம் அடைந்தார்கள். மேலும் ஆய்வகத்தில் இருந்த பொருட்களும் வெடித்து சிதறின.

உடனடியாக ஸ்ரீநாத், நவ்யா உள்பட 6 பேரையும் அங்கிருந்த ஊழியர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ், தென்கிழக்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் இஷா பண்ட் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் தடயவியல் ஆய்வு கூடத்திற்கு விரைந்து வந்தனர்.

பின்னர் அவர்கள், ஆய்வகத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். அதே நேரத்தில் ஆய்வகத்தில் இருந்த மற்ற பொருட்கள் வெடிக்காமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டது. ராய்ச்சூர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட வெடிப்பொருட்கள், எந்த வகையானது என்பதை கண்டறிய வேதிப்பொருட்கள் மூலமாக ஆய்வு நடத்திய போது வெடித்து சிதறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

ராய்ச்சூர் மாவட்டத்தில் துப்புரவு தொழிலாளர்களால் கண்டெடுக்கப்பட்ட வெடிப்பொருட்கள், தடயவியல் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. 25 கிராம் அளவிலான வெடிப்பொருட்கள் ஆய்வகத்தில் வைத்து பரிசோதிக்கப்பட்டது. அப்போது திடீரென்று அது வெடித்து சிதறி உள்ளது. எதற்காக அது வெடித்து சிதறியது எப்படி என்பது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன். விசாரணைக்கு பின்பு தான் சரியான காரணம் தெரியவரும்.

இந்த சம்பவத்தில் விஞ்ஞானிகளான ஸ்ரீநாத், நவ்யா, தொழில்நுட்ப ஊழியர்கள் அந்தோணி பிரபு, பசவபிரபு, விஸ்வநாத், நேத்ராவதி ஆகிய 6 பேரும் காயம் அடைந்துள்ளனர். இவர்களில் ஸ்ரீநாத்தின் 4 விரல்கள் முழுவதும் துண்டாகி உள்ளன. நவ்யாவின் கண், காதில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த 6 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களது உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சம்பவம் குறித்து மடிவாளா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தடயவியல் ஆய்வு கூடத்தில் நடந்த வெடி விபத்து சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story