ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க தடை விதித்தார், உத்தவ் தாக்கரே; பா.ஜனதா எதிர்ப்பு


ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க தடை விதித்தார், உத்தவ் தாக்கரே; பா.ஜனதா எதிர்ப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 5:47 AM IST (Updated: 30 Nov 2019 5:47 AM IST)
t-max-icont-min-icon

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிக்கு தடை விதித்து முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே அதிரடி உத்தரவிட்டார். இதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.

மும்பை,

மும்பையில் கொலபா - பாந்திரா - சீப்ஸ் இடையே 3-வது மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மெட்ரோ ெரயில் திட்டத்தின் பணிமனை இயற்கை எழில் கொஞ்சும் மரம், செடி, கொடிகள் நிறைந்த ஆரேகாலனியில் அமைக்கப்படுகிறது. இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் பாரதீய ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான முந்தைய அரசாங்கம் அங்கு மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதில் உறுதியாக இருந்தது.

அந்த கூட்டணி அரசில் அங்கம் வகித்த சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இதற்கிடையே அரசின் இந்த முடிவை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் ஐகோர்ட்டு மரங்களை வெட்ட தடை விதிக்க மறுத்ததை அடுத்து,கடந்த மாதம் அங்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டித் தள்ளப்பட்டன. இதற்கு எதிராக போராட்டம் வெடித்தது.

ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில், மராட்டியத்தின் புதிய முதல்-மந்திரியாக பதவி ஏற்று உள்ள சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, அந்த பணிக்கு நேற்று அதிரடியாக தடை விதித்து உத்தரவிட்டார்.

இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த அவர், ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைப்பது தொடர்பாக முழு விஷயங்களும் ஆராயப்படும். இரவில் மரங்கள் வெட்டித் தள்ளப்படும் கலாசாரத்தை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அடுத்த உத்தரவு வரும் வரை மரத்தின் ஒரு இலை கூட வெட்டப்படாது என்றார்.

ஆனால் இதற்கு பாரதீய ஜனதா எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இதுகுறித்து முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், “மும்பை ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுகளை மீறி ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்கும் பணிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது துரதிருஷ்டவசமானது.

ஜப்பான் பன்னாட்டு கூட்டமைப்பு குறைந்த வட்டியில் இந்த திட்டத்திற்காக ரூ.15 ஆயிரம் கோடி கடன் கொடுத்து இருந்தது. உத்தவ் தாக்கரேயின் இந்த முடிவு முதலீடுகளை குறைக்கும், அனைத்து உள்கட்டமைப்பு திட்டங்களும் ஸ்தம்பிக்கும்” என டுவிட்டரில் தெரிவித்து உள்ளார்.

Next Story