பஞ்சாப்பில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: ராயக்கோட்டை ராணுவ வீரர் பலி திருமணமான 7 மாதத்தில் சோகம்


பஞ்சாப்பில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்து விபத்து: ராயக்கோட்டை ராணுவ வீரர் பலி திருமணமான 7 மாதத்தில் சோகம்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 5:22 PM GMT)

பஞ்சாப்பில் ஆம்புலன்ஸ் கவிழ்ந்த விபத்தில் ராயக்கோட்டையை சேர்ந்த ராணுவ வீரர் திருமணமான 7 மாதத்தில் பரிதாபமாக இறந்தார்.

ராயக்கோட்டை,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள முத்தம்பட்டியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் சரவண பாண்டியன் (வயது 31). இவருடைய மனைவி ஷோபா. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 மாதங்கள் ஆகிறது. தற்போது ஷோபா 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். சரவண பாண்டியன் பஞ்சாப் மாநிலம்் அபுர் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அவர் சம்பவத்தன்று இரவு சிகிச்சைக்காக வந்தவரை மற்றொரு மருத்துவமனைக்கு அழைத்துக் கொண்டு ராணுவ ஆம்புலன்சில் சென்றார். ஆம்புலன்சில் சரவண பாண்டியன் உள்பட 5 பேர் இருந்தனர். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஆம்புலன்ஸ் தாறுமாறாக ஓடி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆம்புலன்சில் இருந்த சரவணபாண்டியன் உள்பட 5 பேரும் பலியானார்கள்.

உடல் அடக்கம்

இதையடுத்து சரவணபாண்டியனின் உடல் விமானம் மூலம் பெங்களூரு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ அதிகாரி மனோ தலைமையில் சரவணபாண்டியனின் சொந்த ஊரான முத்தம்பட்டிக்கு நேற்று கொண்டு வரப்பட்டது. அவரது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதனர். இதைத் தொடர்ந்து இறுதி சடங்குகள் செய்யப்பட்டு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் முத்தம்பட்டி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story