மஞ்சூர் அருகே, அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு


மஞ்சூர் அருகே, அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 10:30 PM GMT (Updated: 30 Nov 2019 5:30 PM GMT)

மஞ்சூர் அருகே அரசு பஸ்சை காட்டு யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த யானைகள் மளிகைக்கடையையும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன.

மஞ்சூர், 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்களை சுற்றிலும் அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதிகளில் காட்டு யானை, சிறுத்தை புலி, கரடி, காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த சில மாதகளாக காட்டு யானைகள், சிறுத்தைப்புலி உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்கு புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானைகள் கெத்தை பகுதியை சேர்ந்த ராமப்பா என்பவரின் மளிகைக்கடைக்குள் புகுந்தன. பின்னர் மளிகைக் கடையில் இருந்து அரிசி மாவு உள்ளிட்ட பொருட்களை தின்றும், பொருட்களை மிதித்தும் நாசம் செய்தன. அப்போது யானையின் பிளிறல் சத்தம் கேட்டு அங்கு சென்ற ராமப்பா, யானைகள் நிற்பதை கண்டதும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் இதுபற்றி குந்தா வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்.

அதன்பேரில் வனச்சரகர் சரவணன், வனவர் ரவிக்குமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். வனத்துறையினரின் நீண்ட நேர போராட்டத்துக்கு பிறகு அந்த யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன. மேலும் வனத்துறையினர், யானைகள் மீண்டும் அட்டகாசம் செய்யாமல் இருக்க தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தநிலையில் அதே யானைகள் மீண்டும் நேற்று காலை 6 மணி அளவில் கெத்தை அருகே பெகும்பள்ளம் பகுதியில் உள்ள சாலையில் உலா வந்தன. அப்போது மஞ்சூரில் இருந்து 30-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பஸ்சை ஒன்று வந்தது. பெகும்பள்ளம் பகுதியில் பஸ் வந்தபோது, ஒரு குட்டியுடன் 4 யானைகள் நிற்பதை பார்த்ததும் பஸ் டிரைவர் பஸ்சை சற்று தொலைவில் நிறுத்தினார். இதனை கவனித்த யானை கூட்டம் பஸ்சை நோக்கி வேகமாக ஓடிவந்தது. இதனால் பஸ்சில் இருந்த பயணிகள் கதிகலங்கி போனார்கள். மேலும் அந்த யானைகள் அனைத்தும் பஸ்சை வழிமறித்தபடி பிளிறின. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து சற்று நேரம் கழித்து அந்த யானைகள் தானாகவே அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றுவிட்டன. அதன்பின்னர் தான் பயணிகள் நிம்மதி அடைந்தார்கள். இதைத்தொடர்ந்து அரசு பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.

Next Story