டெல்டா மாவட்டங்களில் கன மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி


டெல்டா மாவட்டங்களில் கன மழை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 7:19 PM GMT)

காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்தது. விடிய, விடிய வெளுத்து வாங்கிய மழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர்,

தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. பருவமழை தொடங்கிய வேகத்தில் முதல் ஒரு வாரம் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.

அதன் பின்னர் மழை விட்டு விட்டு பெய்து வந்தது. வெப்ப சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்தது.

கொட்டி தீர்த்த கன மழை

இதனிடையே டெல்டா மாவட்டங்களில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதன்படி தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கன மழை கொட்டி தீர்த்தது.

தஞ்சை மாவட்டத்தில் பல இடங்களில் விடிந்த பின்னரும் மழை ஓயவில்லை. விடிந்ததே தெரியாத அளவுக்கு வாகனம் மேக மூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் வல்லம், திருவிடைமருதூர், மதுக்கூர், பட்டுக்கோட்டை, கும்பகோணம், வெட்டிக்காடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பலத்த மழை கொட்டி தீர்த்தது.

பெருக்கெடுத்து ஓடியது

கனமழை காரணமாக தஞ்சை மாவட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. நேற்று காலையில் மழை பெய்து கொண்டே இருந்ததால் பள்ளி சென்ற மாணவ, மாணவிகள் குடைபிடித்தபடியும், மழைக்கோட்டு அணிந்தபடியும் சென்றனர். சில மாணவர்கள் மழையில் நனைந்தபடியே சென்றனர்.

மழை தொடர்ந்து பெய்ததால் மதியத்துக்கு பின்னர் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. பாபநாசம், கபிஸ்தலம், அய்யம்பேட்டை, மெலட்டூர், அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் நேற்று பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

முதியவர் பலி

மெலட்டூர் பகுதியில் பெய்த மழையால் கரம்பை சாலைத்தெருவில் கூரை வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அங்கு வசித்து வந்த துரைக்கண்ணு(வயது 70) என்பவர் பரிதாபமாக இறந்தார். கபிஸ்தலம் பகுதியில் பெய்த தொடர் மழையால் ராமானுஜபுரம் கிராமம் கோவில்பத்து தெருவில் சரோஜா என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு திடீரென இடிந்து விழுந்தது.

இதில் வீட்டில் இருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன. வீடு இடிந்து விழுந்தபோது வீட்டில் யாரும் இல்லை. இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

விவசாயி சாவு

திருவாரூர் மாவட்ட பகுதிகளிலும் நேற்று பலத்த மழை பெய்தது. திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை விடிய, விடிய கொட்டி தீர்த்தது.

மன்னார்குடி அருகே உள்ள பரவாக்கோட்டை கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த விவசாயி ரவிச்சந்திரன்(53) என்பவருடைய வீட்டு சுவர் கன மழையால் இடிந்து விழுந்தது. இதில் ரவிச்சந்திரன் இடிபாடுகளுக்கு இடையே சிக்கி பரிதாபமாக இறந்தார்.

திருத்துறைப்பூண்டி பகுதியில் இடைவிடாது பெய்த மழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் மக்கள் அவதிப்பட்டனர்.

நாகையில் கடல் சீற்றம்

நாகை மாவட்டத்தில் இரவு முழுவதும் இடைவிடாது பெய்த கன மழையால் பள்ளிகளுக்கு மட்டும் நேற்று விடுமுறை விடப்பட்டது. கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நாகை மாவட்டம் தலைஞாயிறு, வாய்மேடு, கீழையூர், திருப்பூண்டி, வேதாரண்யம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

தரங்கம்பாடி அருகே உள்ள கொத்தங்குடி, கடக்கம், திருக்களாச்சேரி, ஆயப்பாடி, எரவாஞ்சேரி ஆகிய கிராமங்களில் 11 கூரை வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து சேதம் அடைந்தன.

தண்ணீரில் மூழ்கிய நெற் பயிர்கள்

டெல்டா மாவட்டங்களில் இது சம்பா, தாளடி நெல் சாகுபடி பருவமாகும். வடகிழக்கு பருவமழை தொடங்கியபோது மிதமாக பெய்து வந்த மழையை பயன்படுத்தி விவசாயிகள் நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வந்தனர். மிதமான மழை, பயிர் வளர்ச்சிக்கு கைகொடுத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் தற்போது பெய்த கனமழையால் பல இடங்களில் வயல்களை மழைநீர் சூழ்ந்து விட்டது. தஞ்சை- மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், துறையுண்டார்கோட்டை பகுதிகளில் இளம் நெற்பயிர்கள் தண்ணீீரில் மூழ்கி காணப்படுகின்றன.

தஞ்சை கீழவஸ்தாசாவடி உள்ளிட்ட இடங்களில் நெற்பயிர்கள் சாய்ந்து காணப்பட்டன. வயல்களில் இருந்து மழைநீரை வெளியேற்ற விவசாயிகள் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். மழை நீடிக்கும் பட்சத்தில் பயிர்கள் அழுகி வீணாக வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Next Story