நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 111 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்


நாகை மீன்வள பல்கலைக்கழகத்தில் 111 மாணவ-மாணவிகளுக்கு பட்டம் கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 7:25 PM GMT)

நாகை மீன்வளபல்கலைக்கழகத்தில் 111 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை கவர்னர் பன்வாரிலால் புரோகித் வழங்கினார்

நாகப்பட்டினம்,

நாகையில் உள்ள ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்தின் 6-வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. விழாவிற்கு தமிழக கவர்னரும், பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் தலைமை தாங்கி, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.

இதில் 5 மாணவர்களுக்கு முனைவர் பட்டங்கள், 28 மாணவர்களுக்கு முதுநிலை பட்டங்கள், 65 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்கள் உள்பட மொத்தம் 111 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன.

முன் மாதிரி

இதில் ஹெர்மன் ஜி‌ஷா என்ற மாணவி இளநிலை படிப்பில் அதிகபட்சமாக 10 பதக்கங்களை பெற்று பதக்கப்பட்டியலில் முதலிடத்தை பிடித்தார். தொடர்ந்து முதுநிலை பட்டப்படிப்பில் மாணவி முத்து அபி‌ஷாக் என்பவர் 7 பதக்கங்களை பெற்றார்.

முன்னதாக துணைவேந்தர் பெலிக்ஸ் வரவேற்று பேசினார். அவர் ்பேசும்போது, வருகிற 2025-ம் ஆண்டில் மீன்வளம் சார்ந்த தொழில்களுக்கு ஏறத்தாழ 4 ஆயிரம் பட்டதாரிகளும், 25 ஆயிரம் மீன்வள தொழில்சார் பட்டதாரிகளும் தேவைப்படுகின்றனர். இதனை முன்கூட்டியே உணர்ந்து மீன்வளப்பல்கலைக்கழகம் மற்ற மாநில மீன்வளப்பல்கலைக்கழகங்களுக்கு முன் மாதிரியாக நாட்டிலேயே அதிகப்படியான 37 மீன்வளம் சார்ந்த படிப்புகளை தமிழகம் முழுவதும் உள்ள தனது 45 உறுப்பு நிலையங்கள் மூலம் வழங்கி வருகிறது என்றார்.

பட்டதாரிகளுக்கு சுய தொழில்

மத்திய மீன்வள கல்வி நிலையத்தின் துணைவேந்தர் கோபால் கிரு‌‌ஷ்ணா பேசியதாவது:-

நாகை மீன்வள பல்கலைக்கழகமானது, உயிர்கூழ்மத்திரள் தொழில்நுட்பத்தின் மூலம் மீன் உற்பத்தியை அதிகரித்தல், மறு சுழற்சி நீர்வாழ் உயிரின வளர்ப்பு அமைப்பு மூலம் அதி தீவிர மீன் உற்பத்தி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் ஆய்வகங்களின் மூலம் பண்ணையாளர்களுக்கு தொடர் சேவை திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகிறது.

இதன் மூலம் இளம் மீன்வள பட்டதாரிகளுக்கு சுயதொழிலுக்கான புதிய வாய்ப்புகளை, நாடு முழுவதும் இந்த பல்கலைக்கழகம் அறிமுகப் படுத்துவதில் முன்னணி வகிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி, கூடுதல் கலெக்டர் பிரசாந்த், பவுன்ராஜ் எம்.எல்.ஏ. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story