15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவில் மக்கள் தான் கிங்மேக்கராக இருப்பார்கள் - குமாரசாமி பேட்டி


15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவில் மக்கள் தான் கிங்மேக்கராக இருப்பார்கள் - குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2019 4:45 AM IST (Updated: 1 Dec 2019 1:16 AM IST)
t-max-icont-min-icon

15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவில் மக்கள் தான் கிங்மேக்கராக இருப்பார்கள் என்று முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் குறைந்த பட்சம் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே முதல்-மந்திரி எடியூரப்பா ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும். இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு எடியூரப்பா தலைமையிலான பா.ஜனதா அரசு கவிழும் என்று சித்தராமையா கூறி வருகிறார். இதனால் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு பா.ஜனதா அரசு கவிழ்ந்தால் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி அரசு அமையலாம் என்றும், குமாரசாமி மீண்டும் கிங் மேக்கர் ஆவார் என்றும் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து பெலகாவி மாவட்டம் அதானி இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்ய சென்றிருந்த முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:-

15 தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத்தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு கர்நாடக அரசியலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். பா.ஜனதா அரசு கவிழ்ந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வரும் என்று சித்தராமையா கூறியுள்ளார். 12 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். முதல்-மந்திரி எடியூரப்பா உள்ளிட்ட பா.ஜனதாவினர் 15 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறி வருகிறார்கள். அவர்களை போல நான் கூற மாட்டேன்.

இடைத்தேர்தலில் ஜனதாதளம்(எஸ்) கட்சி 6 முதல் 8 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அந்த தொகுதிகளில் ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவதற்கான சாத்தியங்கள் இருப்பதால், இதனை கூறுகிறேன். வருகிற 9-ந் தேதிக்கு பின்பு கர்நாடக அரசியலில் மாற்றம் ஏற்படும். 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகளில் மக்கள் தான் கிங் மேக்கராக இருப்பார்கள், நான் இருக்க மாட்டேன். நான் என்றும் கிங் மேக்கராக இருந்தது இல்லை. மக்கள் தான் எப்போதும் கிங் மேக்கராக இருந்து வருகிறார்கள்.

ஏற்கனவே பிராணிகளை விலைக்கு வாங்குவது போல, எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி பா.ஜனதாவினர் ஆட்சிக்கு வந்துள்ளனர். இடைத்தேர்தல் முடிந்த பின்பு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் இன்னும் சில பிராணிகளை (எம்.எல்.ஏ.க்கள்) விலைக்கு வாங்க முயற்சிப்பார்கள். வருகிற 9-ந் தேதிக்கு பின்பு எல்லா பிரச்சினைகளுக்கும் விடை கிடைக்கும். எனது தலைமையிலான கூட்டணி ஆட்சியில் எம்.எல்.ஏ.க்களுக்கு நிதி ஒதுக்கியதில் பாரபட்சம் பார்க்கவில்லை.

லட்சுமி ஹெப்பால்கருக்கு அதிக நிதி ஒதுக்கி இருப்பதாக ரமேஷ் ஜார்கிகோளி குற்றச்சாட்டு கூறியுள்ளார். லட்சுமி ஹெப்பால்கர் தொகுதியில் உள்ள நீர்ப்பாசன திட்டங்களுக்கு அதிக நிதி தேவைப்பட்டதால், அதற்கான நிதியை ஒதுக்கினேன். ரமேஷ் ஜார்கிகோளி தொகுதியில் தொடங்கப்பட்ட திட்டங்களுக்கு குறைந்த அளவிலான நிதி தேவைப்பட்டது. அந்த நிதியை ஒதுக்கி இருந்தேன். திட்டங்களுக்கு ஏற்ப ஒதுக்கப்பட்ட நிதியில் மாற்றம் இருந்தது. ஆனால் பாரபட்சமாக நிதி ஒதுக்கவில்லை.

இவ்வாறு குமாரசாமி கூறினார்.

Next Story