கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட ரே‌‌ஷன் கடை பணியாளர்கள்


கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்ட ரே‌‌ஷன் கடை பணியாளர்கள்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:30 PM GMT (Updated: 30 Nov 2019 8:06 PM GMT)

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் கருப்பு சட்டை அணிந்து ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

கள்ளக்குறிச்சி, 

பணிவரன்முறை, தனித்துறை மற்றும் மருத்துவப்படி ரூ.300 வழங்க வேண்டும் என்பன உள்பட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 13-ந்தேதி திருச்சியில் உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளனர்.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் உள்ள வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க அலுவலக வளாகத்தில் ரே‌‌ஷன் கடை பணியாளர்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூட்டுறவு சார் பதிவாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், பொதுமக்களுக்கு அரிசி, சர்க்கரை ஆகியவற்றை தட்டுப்பாடின்றி கொடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ரே‌‌ஷன் கடை பணியாளர்களை கேட்டுக்கொண்டார்.

இந்த கூட்டத்தில் சங்க மாவட்ட தலைவர் ஜெகதீஸ்வரி தலைமையில் மாவட்ட செயலாளர் பெருமாள், பொருளாளர் கிரு‌‌ஷ்ணசாமி, துணைத்தலைவர்கள் பரசுராமன், வேல்முருகன், இணைச் செயலாளர்கள் ஏழுமலை, அமலா மற்றும் மாயவன் உள்பட கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், சின்னசேலம், தியாகதுருகம், கல்வராயன்மலை, ரி‌ஷிவந்தியம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ரே‌‌ஷன் கடை பணியாளர்கள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர். கூட்டம் முடிந்ததும் ரே‌‌ஷன்கடை பணியாளர்கள் கருப்பு சட்டை அணிந்தபடி பணிக்கும் சென்றனர். இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story