கடந்த 7 ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.69 கோடி கடன் உதவி கலெக்டர் தகவல்


கடந்த 7 ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.69 கோடி கடன் உதவி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:30 PM GMT (Updated: 30 Nov 2019 8:28 PM GMT)

குமரி மாவட்டத்தில் கடந்த 7 ஆண்டுகளில் புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.69 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்தார்.

நாகர்கோவில்,

தமிழக அரசின் தொழில் வணிகத்துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட தொழில் மையம் மூலம் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம், புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது.

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தில் ரூ.1 கோடி வரையாக இருந்த கடன் தொகையை 24-4-2018 முதல் ரூ.5 கோடியாக உயர்த்தி தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பு, பட்டய படிப்பு, ஐ.டி.ஐ மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழில் பயிற்சி ஆகிய கல்வி தகுதி பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட்டு, பின்னர் வங்கிகள், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், தமிழ்நாடு தொழிற் கூட்டுறவு வங்கி மூலம் கடன் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.

ரூ.69.36 கோடி

இந்த திட்டத்தில் தொழில் தொடங்கும் தொழில் முனைவோருக்கு தொழிலின் திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ.30 லட்சம் வரை முதலீட்டு மானியமும், 3 சதவீத வட்டி மானியமும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில் முனைவோர்களுக்கு 2012 முதல் 2019 வரையிலான 7 நிதியாண்டுகளில் 65 தொழில் முனைவோர்களுக்கு திட்ட மதிப்பீடாக ரூ.37.08 கோடியும், மானியத் தொகையாக ரூ.6.20 கோடியும் ஆக ரூ.43.28 கோடி வழங்கப்பட்டுள்ளது.

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் 2012 முதல் 2019 வரையிலான 7 நிதியாண்டுகளில் 950 வேலைவாய்ப்பு உருவாக்குபவர்களுக்கு திட்ட மதிப்பீடாக ரூ.21.34 கோடி கடனுதவியும், மானியத் தொகையாக ரூ.4.74 கோடியும் ஆக ரூ.26.08 கோடி வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.69.36 கோடி வழங்கப்பட்டுள்ளது.

தொழில் முனைவோர்களாக...

இத்திட்டத்தில் கடன் பெற விரும்பும் இளைஞர்கள், இளம் பெண்கள் தங்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி தகுதிச்சான்று, ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு இல்லாதவர்கள் தாசில்தாரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிட சான்றிதழ், சாதிச்சான்றிதழ், எந்திரத்திற்கான விலைப்புள்ளி ஆகிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம். மேலும் இத்திட்டங்களை இளைஞர்கள் பயன்படுத்தி எதிர்கால தொழில் முனைவோர்களாக உருவாக வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story