தமிழகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இந்த மாதம் முதல் மின் இணைப்பு வழங்கப்படும்


தமிழகத்தில் தட்கல் முறையில் விண்ணப்பித்த விவசாயிகளுக்கு இந்த மாதம் முதல் மின் இணைப்பு வழங்கப்படும்
x
தினத்தந்தி 30 Nov 2019 11:00 PM GMT (Updated: 30 Nov 2019 8:50 PM GMT)

தமிழகத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்துள்ள விவசாயிகளுக்கு இந்த மாதம் முதல் மின் இணைப்பு வழங்கப்படும் என அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

பள்ளிபாளையம்,

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பள்ளிபாளையம் ஜீவா செட் அருகில் ரூ.8.80 லட்சத்தில் அங்கன்வாடி மையம், கிரு‌‌ஷ்ணவேணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.7.50 லட்சத்தில் வடிகால் கட்டி பேவர் பிளாக் அமைத்தல், கண்டிப்புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் ரூ.23.21 லட்சத்தில் 3 வகுப்பறைகள், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ரூ.15 லட்சத்தில் சைக்கிள் நிறுத்தும் கூடாரம், நாட்டான்கவுண்டன்புதூரில் ரூ.8.80 லட்சத்தில் அங்கன்வாடி மையம், ரூ.12.58 லட்சத்தில் ரே‌‌ஷன் கடை, ஓம் கோவில் பின்புறம் ரூ.2 லட்சத்தில் கான்கிரீட் சாலை என மொத்தம் 7 இடங்களில் ரூ.77.89 லட்சம் மதிப்பில் அரசின் பல்வேறு கட்டுமான பணிகளுக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி கலந்துகொண்டு வளர்ச்சித்திட்ட பணிகளை பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

மின் இணைப்பு

பின்னர் அவர் பள்ளிபாளையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் விவசாய மின் இணைப்பு பெற தட்கல் முறையில் விண்ணப்பித்தவர்களுக்கு இந்த மாதம் (டிசம்பர்) முதல் மின் இணைப்புகள் வழங்கப்படும். தட்கல் மின் இணைப்பு வழங்கும் திட்டம் 2017-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இதன்படி வருடந்தோறும் 10 ஆயிரம் இணைப்புகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டும் 10 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளன.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் டிசம்பர் 12-ந் தேதி வரை கேங்மேன் பணிக்கு உடல்தகுதி தேர்வு நடைபெறும். இந்த தேர்வு அனைத்து மண்டலங்களிலும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு, பணி ஆணைகள் வழங்கப்படும். அதற்குள்ளாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால், தேர்தல் நடைமுறைகளை கருத்தில்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நிலக்கரி

மாநிலத்தில் உள்ள அனல்மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் உள்ளது. மாதம் 75 ஆயிரம் மெட்ரிக் டன் இருப்பு தேவை என்ற நிலையில் தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் நிலக்கரி மட்டுமே வந்து கொண்டுள்ளதால் நிலக்கரி வரத்து அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் கோடைகாலத்தில் அதிக நிலக்கரி தேவை என்பதால் கையிருப்பு வைக்கவேண்டும். எனவே மத்திய சுரங்கங்கள் துறை மந்திரியை சந்தித்து மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கையிருப்பில் வைக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. புதிய மின் நிலையங்களுக்கு கோல்பிளாக் ஒதுக்கீடு செய்வதற்கும் மனு கொடுத்துள்ளோம். அதற்கு மத்திய மந்திரி உரிய ஒதுக்கீடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

எண்ணூர் அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் குந்தா நீரேற்று புனல் மின் திட்டம் ஆகிய பணிகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி விரைந்து வழங்க மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரியை பார்த்து மனு கொடுத்துள்ளோம். விரைவாக நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலவச தொலைபேசி

தமிழகத்தில் மின்தடை முழுமையாக தடுக்கப்பட்டுவிட்டது. சிறிய மின்தடைகள் இருந்தாலும், மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி தடை நீக்கம் மையம் வழியாக பொதுமக்களிடம் இருந்து புகார்களை பெற்று, உடனுக்குடன் மின்தடை சரிசெய்யப்படுகிறது. இதற்காக 1912 என்ற இலவச தொலைபேசி வசதியும் செய்யப்பட்டுள்ளது. மின்தடை குறித்த புகார் தெரிவித்தால் உடனுக்குடன் அவை சரி செய்யப்படுகிறது.

இவ்வாறு அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் மெகராஜ், கல்வி அதிகாரி ரவி, தாசில்தார் தங்கம், வருவாய் அலுவலர் சரவணமூர்த்தி, பள்ளிபாளையம் முன்னாள் நகரமன்ற தலைவர் வெள்ளியங்கிரி, ஒன்றிய முன்னாள் தலைவர் செந்தில், நகரமன்ற முன்னாள் துணைத் தலைவர் சுப்பிரமணியம், பள்ளிபாளையம் நகராட்சி ஆணையாளர் இளவரசன், தலைமை ஆசிரியர் விஜயகுமார், சரஸ்வதி, கருப்பண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Next Story