கருமந்துறையில் ரூ.4¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்


கருமந்துறையில் ரூ.4¼ கோடியில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
x
தினத்தந்தி 1 Dec 2019 4:30 AM IST (Updated: 1 Dec 2019 2:31 AM IST)
t-max-icont-min-icon

கருமந்துறையில் 972 பயனாளிகளுக்கு ரூ.4¼ கோடியில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

பெத்தநாயக்கன்பாளையம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அருகே கருமந்துறையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் சித்ரா, சின்னதம்பி, தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ரிட்டோ சிரியாக் திட்ட விளக்கவுரை ஆற்றினார். சிறப்பு அழைப்பாளராக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி கலந்துகொண்டு பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:-

ஏகலைவா பள்ளி

12-ம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ, மாணவிகள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும் என்பதற்காக, அவர்களின் கல்வி கட்டணங்கள் முழுவதையும் அரசே ஏற்று செலுத்தி வருகின்றது. இதன் காரணமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் உயர்கல்வியை கற்று சிறந்து விளங்கி வருகின்றனர். கருமந்துறை மலைப்பகுதியை சேர்ந்த 2 மாணவ, மாணவிகள் கருமந்துறையில் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் மலைவாழ் மாணவ, மாணவிகளுக்காக நடத்தப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. பயிற்சி மையத்தில் படித்து குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றுள்ளனர் என்பது சிறந்த எடுத்துக்காட்டாகும்.

பழங்குடியின மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகின்றது. அந்தவகையில் அபிநவம் ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பெண்கள் மேல்நிலைப்பள்ளி பெத்தநாயக்கன்பாளையத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. அதேபோல் ஏற்காடு மற்றும் கருமந்துறையிலும் ஏகலைவா பள்ளி தொடங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.4¼ கோடி

முன்னதாக 27 மலைவாழ் மக்களுக்கு ரூ.54 லட்சம் மதிப்பில் சிறுதொழில் தொடங்குவதற்கான கடனுதவியும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் ரூ.42.20 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டுவதற்கான நிதியுதவியும் உள்பட 972 பயனாளிகளுக்கு ரூ.4 கோடியே 26 லட்சத்து 90 ஆயிரத்து 854 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.

இதில், பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் முருகேசன், சேலம் புறநகர் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் ஜெயகாந்தன், உமையாள்புரம் கூட்டுறவு சங்க தலைவர் வாசுதேவன், பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் ரெங்கராஜன், மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் பிற்பட்டோர் நலத்துறை அரசு பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன, நாணய சங்க தலைவர் சுதாகர், துணைத்தலைவர் அண்ணாமலை, செயலாளர் ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story