சேலம் மாநகரில் சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு ஒலி எழுப்பும் கருவியுடன் புதிய சிக்னல் அறிமுகம்


சேலம் மாநகரில் சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு ஒலி எழுப்பும் கருவியுடன் புதிய சிக்னல் அறிமுகம்
x
தினத்தந்தி 30 Nov 2019 10:45 PM GMT (Updated: 30 Nov 2019 9:05 PM GMT)

சேலம் மாநகரில் சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு ஒலி எழுப்பும் கருவியுடன் கூடிய புதிய சிக்னல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

சேலம்,

சேலம் மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் சேலம் முள்ளுவாடி கேட், 4 ரோடு, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இருப்பினும், சேலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க போலீசார் பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஒலி எழுப்பும் கருவியுடன் சிக்னல்

இந்தநிலையில், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்புள்ள ரவுண்டானா அருகில் அரசு ஆஸ்பத்திரிக்கு நடந்து செல்லும் பொதுமக்களின் நலன் கருதி மாநகர போக்குவரத்து போலீசார் சார்பில் ஒலி எழுப்பும் கருவியுடன் கூடிய புதிய சிக்னல் முறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன் சோதனை நிகழ்வை, நேற்று மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார், துணை கமி‌‌ஷனர் செந்தில் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, வாகனங்களை நிறுத்தி வைத்து பொதுமக்கள் மட்டும் சாலையை கடப்பதற்கு எத்தனை நிமிடங்கள் ஆகிறது? நான்கு திசைகளில் இருந்தும் ஒரே நேரத்தில் ஒலி எழுப்பும் பட்சத்தில் பாதசாரிகள் கடந்து செல்ல வசதியாக இருக்குமா? என கமி‌‌ஷனர் செந்தில்குமார் ஆலோசனை மேற்கொண்டார்.

இதனை தொடர்ந்து போக்குவரத்து சிக்னலில் பொருத்தப்பட்டுள்ள ஒலி எழுப்பும் கருவியில், பாதசாரிகள் சாலையை கடந்து செல்லவும், சாலையை கடப்பதை பாதசாரிகள் நிறுத்தி கொள்ளவும் என்ற தகவல் ஒலிபரப்பு செய்யப்பட்டது. இதை கவனித்த கமி‌‌ஷனர் செந்தில்குமார், பொதுமக்களுக்கு எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வார்த்தைகள் இருந்தால் நன்றாக இருக்கும் என அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிக்னல் அமைத்த நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ரவுண்டானா உள்பட மொத்தம் 32 இடங்களில் இதுபோன்று சாலையை பொதுமக்கள் கடப்பதற்கு ஒலி எழுப்பும் கருவியுடன் கூடிய புதிய சிக்னல் அமைக்கப்பட உள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாநகர போலீஸ் கமி‌‌ஷனர் செந்தில்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

32 இடங்களில்

சேலம் மாநகரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முள்ளுவாடி கேட் பகுதியில் ெரயில்வே மேம்பாலம் கட்டும் பணிகள் நடப்பதால் அந்த பகுதியானது ஒருவழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் ஏற்படும் சிரமத்திற்கு வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சாலையை கடந்து செல்லும் பொதுமக்களின் வசதிக்காக ஒலி எழுப்பும் கருவியுடன் கூடிய புதிய சிக்னல் முறையை அறிமுகம் செய்துள்ளோம். அதாவது, வாகனங்களை நிறுத்தி பாதசாரிகள் சாலையை கடந்து செல்லும் வகையில் அவர்களுக்கு கேட்கும் வகையில் ஆடியோ ஒலிபரப்பு செய்யப்படும்.

அதன்பிறகு அவர்கள் நடந்து செல்லலாம். முதற்கட்டமாக கலெக்டர் அலுவலகம் அருகே பொருத்தி சோதனை ஓட்டம் செய்யப்படுகிறது. இது சிறப்பாக செயல்படும் பட்சத்தில் மாநகரில் 32 இடங்களில் இருக்கும் சிக்னல்களிலும் பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய மோட்டார் வாகன சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story