முன்னேற துடிக்கும் மாவட்டம் என விருதுநகரை தேர்வு செய்த மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன்? - மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி


முன்னேற துடிக்கும் மாவட்டம் என விருதுநகரை தேர்வு செய்த மத்திய அரசு திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன்? - மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி
x
தினத்தந்தி 30 Nov 2019 11:15 PM GMT (Updated: 30 Nov 2019 10:45 PM GMT)

மத்திய அரசு முன்னேற துடிக்கும் மாவட்டம் என விருதுநகரை தேர்வு செய்துவிட்டு திட்டப்பணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாதது ஏன்? என மாணிக்கம் தாகூர் எம்.பி. கேள்வி எழுப்பி உள்ளார்.

விருதுநகர்,

சிவகாசியில் ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட மாணிக்கம் தாகூர் எம்.பி. இதுகுறித்து கூறியதாவது:- மத்திய அரசு கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை முன்னேற துடிக்கும் மாவட்டம் என தேர்வு செய்து 3 ஆண்டுகளில் இந்த மாவட்டம் முன்னோடி மாவட்டமாக ஆக்கப்படும் என அறிவி்த்தது. மேலும் இந்த மாவட்டத்தில் நீர் வளத்தை மேம்படுத்தவும் பாரம்பரிய நீர்நிலைகளை புனரமைக்கவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நீர்வள மேம்பாட்டு துறை அறிவித்து 2022-ம் ஆண்டுக்குள் இந்த மாவட்டத்தில் நீர்வளம் மேம்படுத்தப்படும் என தெரிவித்தது.

இதற்காக மத்திய அரசின் இணை செயலாளர் பிரவின்குமார் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆனால் சிறப்பு அதிகாரி பிரவின்குமார் இந்த மாவட்டத்தில் மத்திய அரசின் திட்ட செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்ளாமல் மாவட்ட அதிகாரிகள் தரும் புள்ளி விவரங்களை மட்டுமே கணக்கில் எடுத்துக்கொண்டு செல்வதால் இந்த மாவட்டதிற்கு பலன் எதுவும் ஏற்படவில்லை. வளமான திட்டப்பணிகள் குறித்து இதுவரை எவ்வித விவர அறிக்கையும் இந்த தொகுதி எம்.பி.யாகிய எனக்கும் தரப்படவில்லை. இதுபற்றி தொடர்புடைய அமைச்சகத்திடம் தான் தகவல் தெரிவித்து உள்ளேன்.

இந்த மாவட்டத்தை முன்னோடி மாவட்டமாக ஆக்கவேண்டும் என்றால் மத்திய அரசின் திட்டப்பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியது அவசியமாகும். ஆனால் 2 ஆண்டுகள் ஆகியும் கூடுதல் நிதி ஒதுக்கீடு எதுவும் செய்யப்படவில்லை. நீர்வளத்தை மேம்படுத்தவும் மாநில நிதி ஆதாரத்தை கொண்டே திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என மத்திய நீர்வள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது வியப்பு அளிப்பதாக உள்ளது. கூடுதல் நிதி ஒதுக்கீடு இல்லாமல் ஒரு மாவட்டத்தில் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வாய்ப்பு இருக்காது. இந்நிலையில் மாவட்ட மக்களை ஏமாற்றும் வகையில் மத்திய அரசு செயல்படுவது ஏன் என்று தெரியவில்லை.

எனவே இந்த மாவட்டத்தில் தொடக்க கல்வி, சுகாதாரம், கிராமப்புற மேம்பாடு, நீர்வள மேம்பாடு ஆகியவற்றுக்கு மத்திய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யவேண்டியது அத்தியாவசிய தேவை ஆகும். மேலும் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு உள்ள மத்திய அரசின் திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட மக்களுக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டியதும் மத்திய அரசின் சிறப்பு அதிகாரியின் கடமையாகும். அவ்வாறு இல்லாமல் முன்னேற்றப்படும் என்று அறிவிப்பை மட்டும் வெளியிடுவதால் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை.

சுங்க கட்டணம் வசூலிக்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நான்கு வழிச்சாலையை முறையாக பராமரிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு வலியுறுத்தி உள்ளது. ஆனால் விருதுநகர்- சாத்தூர் இடையே நான்கு வழிச்சாலை முறையாக பராமரிக்கப்படாமல் வாகன விபத்து ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்த பகுதியில் 4 வழிச்சாலையை முறையாக பராமரிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கலெக்டர் அலுவலக வளாகம் படந்தால் விலக்கு அருகே நடைமேம்பாலம் அமைக்க மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகத்திடம் வலியுறுத்தி உள்ளேன். இதற்கான தொடர் நடவடிக்கை எடுக்கப்படும்.

தென்னக ரெயில்வே பொதுமேலாளர் தென்மாவட்டங்களுக்கு ஆய்வு பணிக்கு வரும்போது சம்பந்தப்பட்ட எம்.பி.க்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும். அதுவும் நாடாளுமன்ற கூட்டம் நடந்துகொண்டு இருக்கும்போது கூடுமானவரை ஆய்வுப்பணிகள் தவிர்க்கப்பட வேண்டும். சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயில் தினசரி இயக்கப்படவும் செங்கோட்டை-தாம்பரம் அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் உடனடியாக இயக்கப்படவும் மத்திய ரெயில்வே அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன்.

செங்கோட்டை- விருதுநகர் ரெயில் பாதையில் ஆய்வு பணி மேற்கொண்ட பொதுமேலாளர் ரெயில்நிலைய மேம்பாடு குறித்து எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. விருதுநகர் ரெயில்நிலைய மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். திருத்தங்கல் ரெயில்வே மேம்பாலம் அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இதுவரை இல்லாத அளவிற்கு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதமாக குறைந்து உள்ளது. இதுகுறித்து மத்திய அரசு கவலை கொண்டு உள்ளதாக தெரியவில்லை. பொருளாதார நிலையை மேம்படுத்த தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மதுரை விமான நிலைய விரிவாக்கப்பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி விரைவுபடுத்தப்பட வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை நாடாளுமன்றத்தில் உறுதி அளித்தவாறு 3 ஆண்டுகளில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவரவேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story