கழிவுகளை சாப்பிட்டு உயிருக்கு போராடும் மாடுகள்: தனியார் எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் பல்லடத்தில் பரபரப்பு


கழிவுகளை சாப்பிட்டு உயிருக்கு போராடும் மாடுகள்: தனியார் எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் பல்லடத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 30 Nov 2019 11:30 PM GMT (Updated: 30 Nov 2019 11:18 PM GMT)

பல்லடத்தில் எண்ணெய் கழிவுகளை சாப்பிட்ட மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் உயிருக்கு போராடி வருகின்றன. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் தனியார் எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பல்லடம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடம் வடுகபாளையத்தில் சக்தி ஆயில் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்கு தெனாலி என்ற பெயரில் கடலை எண்ணெய், பாமாயில் உள்ளிட்ட சமையல் எண்ணெய் வகைகளை தயாரித்து திருப்பூர், கோவை மற்றும் வெளியூர்களுக்கும் அனுப்பி வருகிறார்கள். எண்ணெய் ஆலையில் எண்ணெயை சுத்திகரிப்பு செய்யும் போது வரும் கழிவு எண்ணெயை முறையாக மண்ணில் புதைத்து அகற்ற வேண்டும். ஆனால் அவ்வாறு வெளியேற்றாமல் அந்த பகுதியில் பல்லடம்-பொள்ளாச்சி சாலையில் உள்ள செங்குட்டையில் கொண்டு போய் கழிவு எண்ணெயை கொட்டியுள்ளனர்.

அந்த குட்டையின் அருகே வசிக்கும் பொதுமக்கள் தங்களது கறவைமாடுகள், ஆடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ராமசாமி என்ற விவசாயியின் 2 கறவை மாடுகள் செங்குட்டையில் மேய்ந்துகொண்டிருந்த போது அங்கு கொட்டப்பட்டிருந்த கழிவு எண்ணெயை சாப்பிட்டுள்ளன. இதனால் அந்த மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டு தற்போது உயிருக்கு போராடி வருகின்றன.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமசாமி மற்றும் அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை சக்தி ஆயில் ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாடுகளின் உரிமையாளர் ராமசாமி கூறியதாவது:-

நான் 6 கறவை மாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்து வருகிறேன். இந்த மாடுகளை நம்பியே நான் பிழைப்பு நடத்தி வருகிறேன். தீவனங்களின் விலை உயர்ந்து விட்டது. இந்த செங்குட்டை பகுதியில் அதிகமாக புல் வளர்ந்துள்ளதால் குட்டை பகுதியில் மாடுகளை மேய்ச்சலுக்காக விடுவது வழக்கம்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்தி ஆயில் ஆலையில் இருந்து வேனில் வந்தவர்கள் ஏதோ பொருட்களை இந்த பகுதியில் கொட்டிக்கொண்டு இருந்தனர். நான் தொலைவில் இருந்து பார்த்ததால் அவர்கள் எதை கொட்டினார்கள் என்பது தெரியவில்லை. குப்பையைத்தான் கொட்டிவிட்டு செல்கிறார்கள் என்று நினைத்தேன்.

மறுநாள் சென்று பார்த்தபோதுதான் அவர்கள் கொட்டி விட்டு சென்றது எண்ணெய் கழிவு என்பது தெரியவந்தது. அதில் இருந்து துர்நாற்றமும் வீசியது. இதுகுறித்து அந்த பகுதியில் உள்ள மற்ற பொதுமக்களிடமும் தெரிவித்தேன். தொடர்ந்து மழை பெய்ததால் மாடுகளை நான் கண்காணிக்கவில்லை.

கடந்த 3 நாட்களாக மாடுகளுக்கு கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதனால் மாடுகளால் எழுந்து நிற்க முடியாமல் படு்த்துக்கிடக்கின்றன. இதைத்தொடர்ந்து சிகிச்சைக்காக மாடுகளை கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம்.

மாடுகளை மருத்துவ பரிசோதனை செய்த கால்நடை மருத்துவர் மாடுகள் கழிவு எண்ணெயை சாப்பிட்டுள்ளதால் கடும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது என்று கூறி மாடுகளுக்கு குளுக்கோஸ் ஏற்றி, மருந்துகளை கொடுத்தார். இருந்தும் 2 நாட்களாக மாடுகளுக்கு வயிற்றுப்போக்கு நிற்கவில்லை. அதனால் நாங்கள் நியாயம் கேட்டு எண்ணெய் ஆலையை முற்றுகையிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து எண்ணெய் ஆலை நிர்வாகத்தினர் கூறுகையில், பாதிக்கப்பட்ட மாடுகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க நஷ்ட ஈடு வழங்கப்படும் என்றனர். இதனையடுத்து எண்ணெய் ஆலையை முற்றுகையிட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறுகையில், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் எண்ணெய் கழிவுகளை திறந்த வெளியில் கொட்டும் இதுபோன்ற தனியார் எண்ணெய் ஆலைகளில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும். இதுபோன்று எண்ணெய் கழிவுகளால் ஏற்படும் பாதிப்புகளில் இ்ருந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை பாதுகாக்கவும் சுற்றுப்புறத்தை சீரழிக்கும் இதுபோன்ற எண்ணெய் ஆலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Next Story