எதிர்க்கட்சி தலைவர் செயல்படும் விதம் குறித்து ஏக்நாத் கட்சேயிடம் பட்னாவிஸ் பாடம் கற்க வேண்டும்; தேசியவாத காங்கிரஸ் தாக்கு


எதிர்க்கட்சி தலைவர் செயல்படும் விதம் குறித்து ஏக்நாத் கட்சேயிடம் பட்னாவிஸ் பாடம் கற்க வேண்டும்; தேசியவாத காங்கிரஸ் தாக்கு
x
தினத்தந்தி 1 Dec 2019 12:11 AM GMT (Updated: 1 Dec 2019 12:11 AM GMT)

எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என ஏக்நாத் கட்சேயிடம் பட்னாவிஸ் பாடம் கற்க வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

மும்பை,

மராட்டிய சட்டசபையில் நேற்று நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் உத்தவ் தாக்கரே அரசு 169 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் எளிதாக வெற்றி பெற்றது. முன்னதாக விதிகளை மீறி சட்டசபை கூட்டம் கூட்டப்பட்டு இருப்பதாகவும், தற்காலிக சபாநாயகர் மாற்றப்பட்டதை கண்டித்தும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பாரதீய ஜனதா வெளிநடப்பு செய்தது.

பாரதீய ஜனதா நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்ததை தேசியவாத காங்கிரஸ் விமர்சித்து உள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக் கூறியதாவது:-

கவர்னர் பகத்சிங் கோஷ்யாரியின் ஒப்புதலுக்கு பின்னரே தற்காலிக சபாநாயகராக திலீப் வல்சே பாட்டீல் மாற்றப்பட்டார். மேலும் அவரது ஒப்புதலுடன் தான் சட்டசபை கூட்டமும் கூட்டப்பட்டது.

அவர்கள் (பா.ஜனதா) வெளிநடப்பு செய்ய சில காரணங்களை தேடினார்கள். அதனால் தான் அவர்கள் சபையில் அமளி செய்தனர். எதிர்க்கட்சி தலைவர் எப்படி செயல்பட வேண்டும் என ஏக்நாத் கட்சேயிடம் இருந்து தேவேந்திர பட்னாவிஸ் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறுகையில், நாங்கள் முற்றிலும் ஜனநாயகவாதிகள். நாங்கள் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க மாட்டோம். எங்களுக்கு இது தனிப்பட்ட போர் அல்ல. நாங்கள் அவர்களது இதயங்களை அன்பால் வெல்வோம் என்றார்.

காங்கிரஸ் தலைவர் அசோக் சவான் கூறுகையில், உத்தவ் தாக்கரேயை திறந்த மனதுடன் தேவேந்திர பட்னாவிஸ் வரவேற்று இருக்க வேண்டும். அதை செய்யாமல் அவர் சிறு தொழில்நுட்ப குறைகளை பெரிதுபடுத்துகிறார் என்றார்.

Next Story