கூடலூர்- கேரளா இடையே, சாலையோர பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி


கூடலூர்- கேரளா இடையே, சாலையோர பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு - வாகன ஓட்டிகள் கடும் அவதி
x
தினத்தந்தி 1 Dec 2019 9:45 PM GMT (Updated: 1 Dec 2019 5:14 PM GMT)

கூடலூர்-கேரளா இடையே சாலையார பள்ளத்தில் லாரியின் சக்கரம் சிக்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

கூடலூர்,

கர்நாடகா, கேரளா மற்றும் தமிழக எல்லைகள் இணையும் இடத்தில் கூடலூர் உள்ளது. கேரள மாநில மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக சரக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்லப்படுகிறது. இதேபோல் கேரளாவில் விளையும் பொருட்கள் கர்நாடகாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் சரக்கு லாரிகள் அதிகளவு இயக்கப்படுவதாலும், மைய பகுதி என்பதால் கூடலூரில் பகுதியில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து கீழ்நாடுகாணி வழியாக கூடலூர் வரும் மலைப்பாதையில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

நீரோட்டம் அதிகம் உள்ள இடங்களில் இன்டர்லாக் கற்கள் பதிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் இருந்து பாக்கு மூட்டைகள் ஏற்றி கொண்டு சரக்கு லாரி ஒன்று நேற்று முன்தினம் நள்ளிரவு கூடலூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது தமிழக- கேரள எல்லையான கீழ்நாடுகாணியில் விடியற்காலை 2½ மணிக்கு சரக்கு லாரி வந்த போது இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வந்த சாலையின் வளைவில் திரும்பியது. அப்போது லாரியின் பின்பக்க சக்கரம் சாலையோர பள்ளத்தில் சிக்கியது. இதனால் லாரி அங்கேயே நிறுத்தப்பட்டது. சாலையில் லாரி நின்றதால் வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் மலைப்பாதை என்பதால் தகவல் பரிமாற்றம் உடனடியாக மேற்கொள்ள முடியாததால் பள்ளத்தில் சிக்கிய லாரியை மீட்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வில்லை. தொடர்ந்து சாலையின் இருபுறமும் வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நின்றது. இதை அறிந்த தேவாலா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து சரக்கு லாரியை மீட்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. இதையடுத்து அப்பகுதி மக்கள் சாலையின் ஒருபுறம் மண்ணை தோண்டினர். இதனால் பல மணி நேரத்துக்கு பிறகு சிறிய ரக கார்கள் மெதுவாக இயக்கப்பட்டது.

ஆனால் கனரக வாகனங்கள் செல்ல இடவசதி இல்லை. பின்னர் லாரியை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. பின்னர் மாலை 5.30 மணிக்கு லாரி மீட்கப்பட்டு, போக்குவரத்து தொடங்கியது. இதனால் கூடலூர்-கேரளா சாலையில் 13 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள், சுற்றுலா பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து கூடலூர் பகுதியில் இருந்து இயக்கப்படும் வாகனங்கள் பந்தலூர் வழியாக சுல்தான்பத்தேரிக்கு திருப்பி விடப்பட்டது.

Next Story