ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த ஒரு டன் வாழைப்பழம் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை


ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த ஒரு டன் வாழைப்பழம் பறிமுதல் - உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 5:54 PM GMT)

திருப்பூரில் ரசாயனம் பயன்படுத்தி பழுக்க வைத்த ஒரு டன் வாழைப்பழத்தை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.

திருப்பூர், 

திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு செய்து, காலாவதியான உணவு பொருட்கள் மற்றும் கலப்பட பொருட்கள், கலப்பட எண்ணெய் உள்ளிட்டவற்றை கண்டறிந்து பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் திருப்பூர் தென்னம்பாளையம் சந்தையில் தரமற்ற இறைச்சி, மீன்கள் மற்றும் பழங்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் பேரில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் தென்னம்பாளையம் சந்தையில் உள்ள இறைச்சி, மீன், பழக்கடைகளில் கொட்டும் மழையில் நேற்று காலை அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது ஈரோடு மாவட்டம் கோபியை சேர்ந்த ராஜூ என்பவரது பழக்கடையில் சோதனை செய்தனர்.

இதில் அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த வாழைப்பழம் மற்ற வாழைப்பழங்களை போன்று இல்லாமல் வித்தியாசமாக இருந்தது. இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் கிடுக்கிப்பிடி போட்டு விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த வாழைப்பழங்கள் ரசாயனம் கலந்த மருந்தை தெளித்து பழுக்கவைக்கப்பட்டது தெரியவந்தது. அனைத்து பழங்களும் ஒரே மாதிரியான கலரில் இருப்பதற்காக பழ வியாபாரி ராஜூ ரசாயனத்தை பயன்படுத்தி பழுக்கவைத்து விற்பனைக்கு கொண்டு வந்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து அதிகாரிகள் ஒரு டன் வாழைப்பழத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.இதுபோல் திருப்பூர் 60 அடி ரோடு, காந்திநகர், காலேஜ் ரோடு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று காலை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

இதுபோன்று ரசாயனம் பயன்படுத்தப்பட்ட பழத்தை சாப்பிடுபவர்களுக்கு வயிற்று உபாதைகள் ஏற் படும். மேலும்,தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே பொதுமக்கள் உணவு பொருட்களை வாங்கி பயன்படுத்தும் போது, மிகவும் கவனமாக செயல்பட வேண்டும். தங்களுக்கு உணவு பொருட்கள் தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளை தொடர்புகொள்ளலாம். நுகர்வோரை பாதிக்கும் வகையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story