நெல்லையில் கனமழை: வீடுகளை சூழ்ந்த வெள்ளம் - பொதுமக்கள் அவதி
நெல்லையில் பெய்த கனமழையால் வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்தனர்.
நெல்லை,
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலை காரணமாக நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் ஒரு சில நாட்களில் விடிய, விடிய மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை சந்திப்பு பகுதியில் நேற்று முன்தினம் பெய்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்தது. நெல்லை மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சந்திப்பு பஸ் நிலையம் விரிவாக்கம் செய்யும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் அங்கு மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. நயினார்குளம் வயல்வெளியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடை வழியாக வந்ததில் சந்திப்பு பகுதி குளம் போல் காட்சி அளித்தது. அந்த வழியாக மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட வாகனங்களிலும், நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்த நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், தச்சநல்லூர் மண்டல உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவி பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டவர்கள் சந்திப்பு ரெயில் நிலையம் பகுதி, மதுரை ரோடு பகுதிகளில் ஆய்வு செய்தனர். பின்னர் மதுரை ரோடு பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டன. அதேபோல் மதுரை ரோடு பகுதியில் உள்ள வாய்க்கால் அடைப்புகளை எந்திரம் மூலம் தூர்வாரினர். இதன் பிறகு தண்ணீர் வடிய ஆரம்பித்தது. இருந்தாலும் ஓடைகளில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் தண்ணீர் வடியாமல் தேங்கியே கிடந்தது.
இதேபோல் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் வரை உள்ள ஓடைகளை தூர்வாரினர். நெல்லை-மதுரை ரோட்டில் உள்ள காவலர் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள ஓடையில் இருந்த அடைப்பை மாநகராட்சி அதிகாரிகள் எந்திரம் மூலம் அகற்றினர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஊழியர்கள் வெள்ளநீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை தொடங்கிய பணி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது.
நெல்லை, பாளையங்கோட்டையில் நேற்று முன்தினம் விடியவிடிய பலத்த மழை பெய்தது. இதனால் பாளையங்கோட்டையில் 80 மில்லிமீட்டர் மழையும், நெல்லையில் 66 மில்லிமீட்டர் மழையும் பதிவானது. நெல்லை சந்திப்பு ரெயில்நிலைய பகுதி, மேம்பால பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியது. இதன் அருகில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக சேறும், சகதியுமாக மாறியதால் பொதுமக்கள் நடந்து செல்ல செல்லமுடியாமல் அவதி அடைந்தனர். இதேபோல் மேலப்பாளையம் ஆமீன்புரம், தைக்காதெரு உள்ளிட்ட பல இடங்களில் மழை நீர் குளம் போல் தேங்கியது.
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் பகுதியில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த வீடுகளில் உள்ளவர்கள் மாநகராட்சி மூலம் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நெல்லை கருப்பந்துறை, பாளையங்கோட்டை அண்ணாநகர், மனகாவலன்பிள்ளைநகர், சமாதானபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் வீட்டைவிட்டு வெளியேற முடியாமல் மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். அந்த பகுதிகளில் மாநகராட்சி சார்பில் பொக்லைன் எந்திரம் மூலம் அடைப்புகள் நீக்கப்பட்டன. இதன் பிறகு வெள்ளம் வடிய தொடங்கியது.
நெல்லை வண்ணார்பேட்டை தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, கொக்கிரகுளம் தொடக்கப்பள்ளி, குருந்துடையார்புரம் பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம் அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு சிந்துபூந்துறை மேகலிங்கபுரம் முகாமில் தாமிரபரணி கரையோரம் வசிக்கும் 100 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை சந்திப்பு எஸ்.டி.சி. பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை கலெக்டர் ஷில்பா வந்து பார்த்து சென்றார். இதைத்தொடர்ந்து மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் நடராஜன் முன்னிலையில் மதிய உணவு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story