தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு


தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 5:54 PM GMT)

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளில் கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடியில் நேற்று பெய்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் உள்ளிட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது மழைநீர் சூழ்ந்து உள்ள வீடுகளில் இருந்த மக்களிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ள தங்குமிடங்களில் பாதுகாப்பாக சென்று தங்குமாறு அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தண்ணீரை விரைந்து அகற்றுவதற்கு அதிகாரிகளை அறிவுறுத்தினார். அப்போது தூத்துக்குடி கூடுதல் கலெக்டர் (வருவாய்) வி‌‌ஷ்ணுசந்திரன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் சந்தீப் நந்தூரி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை பெய்து உள்ளது. இதில் சாத்தான்குளத்தில் 18 சென்டி மீட்டரும், தூத்துக்குடியில் 16 சென்டி மீட்டர் மழையும் பெய்து உள்ளது.

மாவட்டத்தில் சராசரியாக 6 சென்டி மீட்டர் மழை பெய்து உள்ளது. பாபநாசம் அணை நிரம்பி உள்ளதால் அணைக்கு வரும் தண்ணீர் முழுமையாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 30 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் வெளியேற்றப்பட்டு உள்ளது. தாமிரபரணி பாசனத்துக்கு உட்பட்ட குளங்கள் 100 சதவீதம் நிரம்பி உள்ளன.

இதனால் உபரிநீர் சடையநேரி கால்வாயில் விடப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றங்கரையோரங்களில் வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ள 37 இடங்கள் அடையாளம் காணப்பட்டு உள்ளது. இந்த இடங்களில் அனைத்து துறை அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர்.

மாநகராட்சியில் சில இடங்களில் வழக்கமாக தண்ணீர் தேங்கும். தற்போது பெய்த மழையால் அதிக அளவில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த தண்ணீரை தனியார் நிறுவனங்களின் உதவியுடன் அகற்றும் பணி நடந்து வருகிறது.

தற்காலிகமாக மழைநீர் வடிகால் தோண்டுவதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. மக்கள் தங்குவதற்கான 3 தங்கும் இடங்களும் அமைக்கப்பட்டு உள்ளன. அங்கு மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.

ஆற்றங்கரையோரங்களில் இருக்கும் மக்கள், தண்ணீர் தேங்கும் இடங்களில் உள்ள மக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு உள்ள தங்கும் இடங்களுக்கு சென்றால் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.

இதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். மாவட்டத்தில் 160 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளது. இதில் சாத்தான்குளத்தில் ஒரு தங்குமிடத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்கி உள்ளனர்.

குளங்களின் கரைகள் பலவீனமாக இருப்பதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் விரைந்து சென்ற கரைகளை பலப்படுத்தி உள்ளனர். சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் மரங்கள் சரிந்து உள்ளன. அவை உடனடியாக அகற்றப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story