வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாயவிலைக்கடை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி


வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாயவிலைக்கடை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் முத்தரசன் பேட்டி
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 6:00 PM GMT)

வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக்கடை மூலமாக விற்பனை செய்ய வேண்டும் என திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார்.

திருவாரூர்,

குடிமராமத்து பணிகளுக்காக ரூ.1,000 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறிவரும் நிலையில் ஒதுக்கப்பட்ட பணம் முழுமையாக செலவிடப்படவில்லை. பணிகளில் ஊழல் முறைகேடுகள் நடைபெற்று உள்ளது. எனவே தண்ணீர் தேங்கிய பகுதிகளில் நீரை அப்புறப்படுத்திட வேண்டும். எனவே கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதேபோல் மழையினால் கடலுக்கு செல்ல முடியாத மீனவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும்.

ஒரே நாளில் தேர்தல்

உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டுமோ அத்தனை காரியங்களையும் அ.தி.மு.க. அரசு தெளிவாக செய்து வருகின்றது. புதிய மாவட்டங்களை உருவாக்கப்பட்டதற்கும், உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கும் எந்த சம்பவம் இல்லை என முதல்-அமைச்சர் கூறுவது மோசடிதனமானது. ஆட்சி அதிகாரங்களை பயன்படுத்தி தவறான முறையில் அனைத்து பதவிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இருந்து வருகிறது. அதனால் உள்ளாட்சி தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் ஏராளமான அரசு மருத்துவக்கல்லூரிகள் மத்திய அரசிடம் இருக்கின்ற நல் உறவை பயன்படுத்தி பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. நீட் நுழைவு தேர்வின் மூலமாக தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவக்கல்லூரிகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு மத்திய அரசிடம் வலியுறுத்தி நீட் நுழைவு தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விதிவிலக்கு பெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் புதிய மருத்துவக்கல்லூரி பெற்றதே பயனில்லாமல் போய்விடும்.

நியாயவிலைக்கடை மூலமாக

பல்கலைகழங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவிகளுக்கு எந்தவித பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வெங்காயத்தை முதலில் அரிந்தால் தான் கண்ணீர் வரும். தற்போது அதன் விலையை கேட்டாலே கண்ணீர் வருகிறது. எனவே மத்திய, மாநில அரசுகள் வெங்காயத்தை இறக்குமதி செய்து நியாய விலைக்கடை மூலமாக விற்பனை செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், மாநில செயற்குழு உறுப்பினர் பழனிச்சாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் செல்வராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.

Next Story