4-வதுநாளாக கனமழை: 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின


4-வதுநாளாக கனமழை: 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 6:19 PM GMT)

நாகை மாவட்டத்தில் தொடர்ந்து 4-வதுநாளாக பெய்து வரும் கனமழையால் 400 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.

திருமருகல்,

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. பல்வேறு இடங்களில் சம்பா மற்றும் தாளடி சாகுபடி செய்துள்ள வயல்களில் இளம்பயிர்கள் நீரில் மூழ்கின. ஆங்காங்கே மரங்கள் விழுந்தன. சாலைகள் மண் அரிப்பு ஏற்பட்டு சேதமடைந்தன. குக்கிராமங்களின் சாலைகளில் தண்ணீர் தேங்கி கிராம மக்கள் அவதிப்பட்டனர். பல இடங்களில் சாலைகள் சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்தநிலையில் திருமருகல் அருகே சே‌‌ஷமூலை ஊராட்சியில் மானாம்பேட்டை சோதனை சாவடி அருகே திருமலைராஜனாற்றின் குறுக்கே அமைந்துள்ள மதகு நீர் ஒழுங்கியில் மரம் மற்றும் செடி-கொடிகள் தேங்கி தண்ணீர் வடியமுடியாமல் தடையாக இருந்தது.

இதனால் திருமலைராஜனாற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. மேலப்போலகம் கிராமத்தில் திருமலைராஜனாற்றில் கரைகளின் மேல் தண்ணீர் வழிந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள வாய்க்கால்கள் நிரம்பி கரைகள் உடைந்து 400 ஏக்கரில் சாகுபடி செய்துள்ள இளம் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. மேலும் அப்பகுதியில் தாழ்வாக உள்ள குடியிருப்புகளை சுற்றி தண்ணீர் சூழ்ந்தது. தகவலறிந்த திருமருகல் பொதுப்பணித்துறையினர் விரைந்து வந்து மானாம்பேட்டை மதகில் தண்ணீர் வடிய தடையாக இருந்த மரம்,செடி-கொடிகளை அகற்றி விரைவாக தண்ணீர் வடிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

திட்டச்சேரி

திட்டச்சேரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் ஆற்றின் கரைகள் உடைந்தன. மேலும் துறையூர் மரப்பாலம் மூழ்கும் அளவுக்கு தண்ணீர் செல்கிறது. இதனால் இந்த மரப்பாலத்தை பயன்படுத்த முடியாமல் அப்பகுதி மக்கள், மாணவ-மாணவிகள் மாற்றுப்பாதையில் 2 கி.மீட்டர் தூரம் சென்று வருகின்றனர்.

மேலும் கட்டுமாவடி ஊராட்சி நடுக்கடை காலனி தெருவில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இதேபோல் புறாகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளி, வடகரை அரசு நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களையும் மழைநீர் சூழ்ந்துள்ளது.

தொடர் மழை காரணமாக திட்டச்சேரி அருகே உள்ள எரவாஞ்சேரி ஊராட்சி நாட்டார்மங்கலம் வடக்கு தெருவை சேர்ந்த பிரபாகரன், மாயாவதி, தேவங்குடி நடுத்தெருவை சேர்ந்த செந்தில்குமார், மத்தியக்குடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெகதீஸ், அம்சவள்ளி, ராமாயி, முனுசாமி ஆகியோரின் வீடுகள் சேதமடைந்தன. சேதமடைந்த வீடுகளை கிராம நிர்வாக அலுவலர் சுரே‌‌ஷ் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டனர்.

தலைஞாயிறு, நாகூர்

தலைஞாயிறு பகுதியில் பெய்த மழையால் மகாராஜபுரம் ஓடும் போக்குவாய்க்காலில் உள்ள தரைப்பாலம் தண்ணீரில் மூழ்கியது. மேலும் தகட்டூர் ஊராட்சியில் உள்ள கல்யாணச்சேரி செல்லக்கோன் ஆறு தரைப்பாலம் வழியாக

நொச்சிக்கோட்டகம் பகுதியில் உட்புகுந்த உபரி நீரை வெளியேற்றும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முனியநாதன் நேரில் பார்வையிட்டார். நாகூரில் கனமழையால் நாகூர் தெற்கு தெருவில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர் மேலும் அந்தபகுதியில் வடிகால் வசதி இல்லாததால் மழைநீரில் கழிவு நீர் கலந்து விடுகிறது. இதனால் அப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் தேங்கிய மழைநீரையும், கழிவுநீரையும் அகற்றி வடிகால் வசதி அமைத்து தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை பகுதியில் பெய்த கனமழையால் தரங்கைசாலை, காந்திஜி சாலை, பட்டமங்கலத்தெரு, மகாதான தெரு, அர்பன் பேங்க் தெரு உள்ளிட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். புளியந்தெருவில் உள்ள பாதாளசாக்கடை கழிவு நீர் வெளியேற்று நிலையத்திலிருந்து கழிவு நீர் வழிந்து பழங்காவேரி பாசன வாய்க்காலில் கலக்கிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே மயிலாடுதுறை நகரம் முழுவதும் சாலைகளில் இரண்டு புறமும் மழைநீர் ஓடுவதற்கு வசதியாக வடிகால் வசதி ஏற்படுத்த வேண்டும், மழையால் சேதமடைந்த சாலைகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Next Story