மாவட்ட செய்திகள்

தொடர் மழை: திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது + "||" + Heavy rainfall: Thiruchendur, sathankulam areas More than 100 homes were flooded

தொடர் மழை: திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

தொடர் மழை: திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த தொடர் மழையால் திருச்செந்தூர், சாத்தான்குளம் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
ஸ்ரீவைகுண்டம், 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் பலத்த மழையும், மற்ற இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது.

குலசேகரன்பட்டினம் பகுதிகளில் பெய்த மழையால் அங்குள்ள தருவைகுளம் நிரம்பி மறுகால் பாய்ந்தது. இந்த தண்ணீர் குலசேகரன்பட்டினம் கருங்காளியம்மன் கோவில் தெருவில் இருந்து உடன்குடி செல்லும் சாலையில் ஆறுபோல் சென்றது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன. மேலும் உடன்குடி செல்லும் சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை மழை நீர் சூழ்ந்தது. இருந்த போதும் மதுப்பிரியர்கள் தேங்கி நின்ற மழை நீரில் காத்து நின்று மதுப்பாட்டில்களை வாங்கிச் சென்றனர்.

ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் அணையில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள புதுக்குடி கிராமத்தில் ஆற்றின் கரையோரம் இருந்த 100 ஆண்டுகள் பழமையான மருதமரம் நேற்று காலையில் வேருடன் சாய்ந்து திருச்செந்தூர்- நெல்லை மெயின் ரோட்டில் விழுந்தது.

இதனையடுத்து தாசில்தார் சந்திரன் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் சிதம்பரநாதன் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் மற்றும் ஸ்ரீவைகுண்டம் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரே‌‌ஷ்குமார், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் கணேசன், வனச்சரக அலுவலர் விமல்குமார், தீயணைப்பு நிலைய அலுவலர் இசக்கி தலைமையில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு வந்தனர். பின்னர் மரம் வெட்டி அகற்றப்பட்டது. இதன் காரணமாக அந்த சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதே நேரத்தில் ஸ்ரீவைகுண்டம் அணையில் அதிக அளவில் தண்ணீர் வருவதால் வருவாய்த்துறை சார்பில் கரையோர பகுதிகளில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டு உள்ளது. காவல்துறை சார்பில் ரோந்து வாகனம் மூலம் பொதுமக்கள் யாரும் தண்ணீரில் இறங்க வேண்டாம் என்றும், ஆற்றில் யாரும் குளிக்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பெய்த தொடர் மழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் மருதூர் மேலக்காலில் வினாடிக்கு 1,730 கனஅடி தண்ணீரும், கீழக்காலில் 300 கன அடி தண்ணீரும் திறந்து விடப்பட்டு உள்ளது. அதே நேரத்தில் மருதூர் தடுப்பணையை தாண்டி 29 ஆயிரத்து 460 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. இதனால் ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து 26 ஆயிரத்து 142 கனஅடி தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்த தகவல் பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் அதிக அளவில் செல்வதால் ஏரல் தாம்போதி பாலம் மூழ்கியது.

கயத்தாறு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால், கயத்தாறு கலைவாணன் தெருவை சேர்ந்த ரவி என்பவருடைய வீடு, கயத்தாறு அருகே உள்ள கம்மாப்பட்டியைச் சேர்ந்த சாமித்துரை என்பவரின் வீடு, குப்பண்ணாபுரம் கிராமத்தில் நேற்று காலையில் ஒரு வீடும் சேதம் அடைந்தது. திருமங்கலகுறிச்சியில் உள்ள குளத்தில் தண்ணீர் மறுகால் பாய்ந்தது. இதனால் அங்கு மக்காச்சோளப் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. கயத்தாறு பகுதியில் உள்ள கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படவில்லை. இதனால் கயத்தாறு ஊருக்குள் செல்லும் உப்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அரசன்குளம் ஊருக்குள் தண்ணீர் புகுந்தது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது. இதனையடுத்து கயத்தாறு தாசில்தார் பாஸ்கரன், பேரூராட்சி நிர்வாக அலுவலர் ஜோதி பாசு, வருவாய் ஆய்வாளர் காசிராஜன் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். பின்னர் அந்த தண்ணீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆறுமுகநேரி பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரை மழை பெய்தது. இதனால் ஆறுமுகநேரி பள்ளிவாசல் பஜார், எஸ்.எஸ்.கோவில் தெரு, வடக்கு பஜார் உள்ளிட்ட நகரின் முக்கிய பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நேற்று காலையில் ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து சார்பில் மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி நடந்தது. இதற்கிடையே ஆறுமுகநேரி ஐக்கிய வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆறுமுகநேரி பகுதிகளில் உள்ள சேதமடைந்த சாலையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். இல்லை என்றால் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர். மேலும் நேற்று முன்தினம் பெய்த மழைக்கு ஆறுமுகநேரி லட்சுமிமாநகரம் பகுதியில் வசித்து வந்த கட்டித்தங்கம் (வயது 85) என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. இதில் அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.

மேலும் சாத்தான்குளம் அருகே உள்ள பண்ணம்பாறை ஊருக்கு வடக்கு புறத்தில் உள்ள குளம் நேற்று முன்தினம் இரவு உடைந்தது. இதனால் அங்கு இருந்து வெளியேறிய தண்ணீர் கருமேனி ஆற்றில் கலந்து கடைசியாக புத்தன்தருவை குளத்திற்கு சென்றது. அதேபோல் தொடர் மழை காரணமாக சாத்தான்குளம் ஆர்.சி.கோவில் வடக்கு தெருவில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டு, அங்குள்ள பள்ளிக்கூடங்களில் தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலையில் சாத்தான்குளம் பேரூராட்சி நிர்வாக அலுவலர் முருகன் தலைமையில் அதிகாரிகள், குடியிருப்பு பகுதியில் தேங்கிய மழை நீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதேபோல் திருச்செந்தூர் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ஆலந்தலை சுனாமி நகர் பகுதியில் உள்ள சுமார் 95-க்கும் மேற்பட்ட வீடுகளில் குறைந்த அளவு மழை நீர் புகுந்தது. எனினும் அங்குள்ள வீடுகளில் இருந்து மக்கள் யாரும் வெளியேற்றப்படவில்லை. திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு உள்ள சாலை, திருச்செந்தூர்-நெல்லை சாலை, திருச்செந்தூரில் இருந்து குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை, பரமன்குறிச்சி செல்லும் சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

1. சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை
திருச்செந்தூரில் சாத்தான்குளம் காவல்நிலைய சிசிடிவி பதிவு பொறுப்பு காவலரிடம் மாஜிஸ்திரேட் பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார்.
2. திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் மரணம்
திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார். திருச்செந்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.சுப்பிரமணிய ஆதித்தன் உடல் நலக்குறைவால் நேற்று உயிரிழந்தார்.
3. திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை
திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை நடைபெற இருக்கிறது.
4. திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் கனிமொழி எம்.பி. வழங்கினார்
திருச்செந்தூர், குலசேகரன்பட்டினத்தில் 3 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.
5. திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் சாவு - கழுத்து இறுகியதால் பரிதாபம்
திருச்செந்தூரில் வீட்டில் தொட்டில் கட்டி விளையாடிய சிறுவன் இறந்தான். அவனது கழுத்தை சேலை இறுக்கியதால் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.