தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்


தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை கனிமொழி எம்.பி பார்வையிட்டார்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 6:31 PM GMT)

தூத்துக்குடியில் மழைநீர் தேங்கிய பகுதிகளை கனிமொழி எம்.பி. நேற்று பார்வையிட்டார்.

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் குளம்போல் தேங்கி கிடக்கிறது. வீடுகளையும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. இதனை அறிந்த தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி நேற்று மதியம் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

அவர் தூத்துக்குடி எழில்நகருக்கு சென்றார். அங்கு தேங்கி இருந்த மழைநீரை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளை அறிவுறுத்தினார். தொடர்ந்து அன்னை திரேஸ் காலனிக்கு சென்றார். அங்கு தேங்கி கிடந்த மழைநீரில் நீண்ட தூரம் நடந்து சென்று பார்வையிட்டார். அங்கு இருந்த மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் கனிமொழி எம்.பி. தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, ஆணையாளர் ஜெயசீலன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். மாவட்டம் முழுவதும் தேங்கி உள்ள மழைநீரை அகற்றுவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அப்போது, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் கனிமொழி எம்.பி நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடியில் அதிக அளவில் மழை பெய்து உள்ளது. இதனால் பல இடங்களில் தண்ணீர் வடிவதற்கு வழி இல்லாமல் குடியிருப்பு பகுதிகளுக்குள், வீடுகளுக்குள் புகுந்து உள்ளது. அங்கு உள்ள மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது. இந்த பிரச்சினைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்து உள்ளோம். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து உள்ளார். மக்கள் வசிக்க முடியாத பகுதிகளில் தற்காலிகமாக தங்கும் வசதி செய்து கொடுப்பதாகவும் கூறி உள்ளார்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பாதாள சாக்கடை திட்டம் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. அதனை நிறைவேற்றி இருந்தாலே மக்கள் இந்த அளவுக்கு பாதிப்புக்கு உள்ளாகி இருக்க மாட்டார்கள். எனவே அரசு இதற்கு பிறகாவது, அந்த திட்டத்தை விரைந்து நிறைவேற்றி தர வேண்டும். ஆளும் கட்சியினர் வெள்ளம் பாதிப்பை பார்க்க வரவில்லை என்பது மக்களுக்கு தெரியும். நாங்கள் மக்களை சந்திக்கிறோம். எங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறோம்.

உள்ளாட்சி தேர்தல் நடத்தாததே, அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க முடியாத சூழலை உருவாக்கி உள்ளது. அரசு எந்த விதமான மழைநீர் வடிகாலையும் தூர்வாரவில்லை. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பலமுறை குற்றம் சாட்டியும், இந்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. இதற்கு அரசு நியாயமான தீர்வு காணவேண்டும். இல்லையென்றால் ஒரு வருடம் கழித்து வரும் தேர்தலில் மக்கள் அவர்களுக்கு சரியான தீர்ப்பு தருவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story