நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு


நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் - கலெக்டர் ‌ஷில்பா பேச்சு
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 6:31 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி.நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, கலெக்டர் ‌ஷில்பா கூறினார்.

நெல்லை, 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில் உலக எய்ட்ஸ் தினம்-2019, நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் கொண்டாடப்பட்டது. கலெக்டர் ‌ஷில்பா தலைமை தாங்கி, எச்.ஐ.வி. பாதித்தவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

எச்.ஐ.வி பரவாமல் தடுக்கும் பொருட்டு, எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களை நினைவு கூறும் பொருட்டு ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1ல் உலக எய்ட்ஸ் தினம் உலகமெங்கும் கடைபிடிக்கப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வி நோயை கண்டறிய 104 நம்பிக்கை மையங்களும், 8 சுகவாழ்வு மையங்களும், 4 அரசு ரத்தவங்கிகளும், 2 ஏ.ஆர்.டி மையமும், ஒரு இலவச சட்ட உதவி மையமும் செயல்பட்டு வருகின்றன.

எச்.ஐ.வி நோய் தொற்றானது அறியாமையினால் பரவுகிறது. இன்றைய அளவில் இந்த நோய்க்கு முழுமையாக குணப்படுத்த மருந்துகள் இல்லை. ஆனால் வாழ்நாளை நீட்டிக்க பல மருந்துகள் அரசாங்கத்தின் மூலம் இலவசமாக வழங்கப்படுகிறது. 2019-ம் ஆண்டு உலக எய்ட்ஸ் தினக்கருத்து சமூக பங்களிப்பின் மூலம் எச்.ஐ.வி, எய்ட்ஸ் தடுப்பு பணியில் மாற்றத்தினை ஏற்படுத்துதல், இதன் மூலம் புதிய எச்.ஐ.வி. தொற்று இல்லாத, எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்களை புறக்கணிப்பு செய்யாத மற்றும் எய்ட்ஸ் தொடர்பான இறப்புகள் இல்லாத சமுதாயத்தை உருவாக்கிட வேண்டும்.

பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பால் இந்திய அளவில் எச்.ஐ.வி, எய்ட்ஸின் தாக்கம் 57 சதவீதம் வரை (15 முதல் 49 வயதினரிடையே) புதிய எச்.ஐ.வி. தொற்று ஏற்படாமல் குறைக்கப்பட்டுள்ளது. இனி நெல்லை மாவட்டத்தில் எச்.ஐ.வியால் எந்த ஒரு நபரோ, குடும்பமோ அல்லது குழந்தைகளோ பாதிக்கப்படக்கூடாது என்ற உறுதியுடன் அனைவரும் இணைந்து செயல்பட இந்த நாளில் உறுதி மொழி ஏற்க வேண்டும்.

மேலும் 2030-ம் ஆண்டிற்குள் பூஜ்ஜியத்தை நோக்கி என்ற தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் இலக்கை அடைய மக்களிடையே இந்த நோய் குறித்த விழிப்புணர்வையும், நோய் பாதித்தவர்களுக்கு புரிதலோடு கூடிய அரவணைப்பும் மிகவும் அவசியம் என்பதை உணர்ந்து, அனைத்து அரசு மற்றும் அரசுசாரா துறைகளும் இணைந்து செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சி மற்றும் சமபந்தி விருந்தும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் கலெக்டர், மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் எச்.ஐ.வி. பாதித்தவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர்.

இந்த நிகழ்ச்சியில் நெல்லை உதவி கலெக்டர் மணி‌‌ஷ்நாரணவரே, நெல்லை மருத்துவ கல்லூரி டீன் ரவிச்சந்திரன், துணைமுதல்வர் டாக்டர் ரேவதி, காசநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் வெள்ளைச்சாமி, தொழுநோய் தடுப்பு பிரிவு துணை இயக்குநர் டாக்டர் ஆ‌ஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story