மாவட்டத்தில் தொடர் மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது - பயிர்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை


மாவட்டத்தில் தொடர் மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது - பயிர்களும் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 7:54 PM GMT)

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழையால் ஏரிகள் நிரம்பி வருகின்றன. விழுப்புரத்தில் 50 வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்ததால் பொது மக்கள் கடும் அவதியடைந்தனர்.

விழுப்புரம்,

தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலூர், நாகப்பட்டினம், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக கடலூர் உள்பட 10 மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி கடந்த 2 நாட்களாக கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள காணை, வளவனூர், கோழியனூர், பிடாகம், கண்டமானடி, பஞ்சமாதேவி, நன்னாடு, பெரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் நேற்று அதிகாலை 3 மணி முதல் காலை 8 மணி வரை இடைஇடையே விட்டு விட்டு மழை பெய்தது. இந்த மழையால் விழுப்புரம் திருச்சி சாலை, நேருஜி சாலை, திரு.வி.க. சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. குறிப்பாக விழுப்புரம் தாமரைகுளம் பகுதி,மகாராஜபுரம், கம்பன் நகர், சுதாகர் நகர், வீனஸ் நகர், பாண்டியன் நகர், மணிநகர், கணபதி நகர் உள்ளிட்ட பல்வேறு தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கியது. அதில் தாமரைகுளம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது.

ஒரு சில வீடுகளுக்கு மழைநீர் புகுந்ததால், வீட்டில் இருந்தவர்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் தவித்ததோடு, தேங்கி நின்ற நீரை அப்புறப்படுத்தினர். சிலர் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். அதுபோல் விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே சுரங்கப்பாதையிலும் மழைநீர் தேங்கி நின்றதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நகரம் மற்றும் பல கிராமங்களில் உள்ள வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. இந்த தொடர் மழையினால் விழுப்புரம், மரக்காணம், வானூர், செஞ்சி பகுதி கிராமப்புறங்களில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெல், மணிலா, உளுந்து உள்ளிட்ட பல்வேறு வகையான பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதைபார்த்து கவலை அடைந்த விவசாயிகள் வயல்களில் தேங்கிய நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

திண்டிவனம், மரக்காணம், வானூர் பகுதியிலும் நேற்று அதிகாலை முதல் மாலை வரை பலத்த மழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கியது. மரக்காணம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பிலான உப்பளங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் பிரம்மதேசம், விக்கிரவாண்டி, மேல்மலையனூர், திருவெண்ணெய் நல்லூர், மயிலம், செஞ்சி உள்பட மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையினால் ஏரிகள், குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆத்திப்பட்டு, ஓமிப்பேர் ஏரி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. இதில் அப்பகுதி இளைஞர்கள் சிலர் மீன்களை பிடித்து சென்றனர். மழை காரணமாக திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அரும்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி முன்பு மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் மாணவர்களுக்கு நோய் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பள்ளி வளாகம் முன்பு தேங்கியுள்ள மழை நீரை அகற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்மழையால் செஞ்சி சங்கராபரணி ஆறு, திருவெண்ணெய்நல்லூர் மலட்டாற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. செஞ்சி அருகே மேல்களவாய் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தில் மழைநீர் செல்வதால் போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதனால் மேல்களவாய் தரைப்பாலத்தை பயன்படுத்தி வந்த அப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் 4 கிலோ மீட்டர் தூரம் சென்று தங்களது சொந்த ஊர்களுக்கு பெரும் சிரமங்களுக்கு இடையே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் செவலபுரை வராகநதி அணை மற்றும் செஞ்சி பொன்பத்தி ஏரி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பி வழிகிறது. செஞ்சி முல்லைநகரில் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

வரிக்கல் கிராமத்தில் 4 கூரை வீடுகளும், மேல் அருங்குணத்தில் 3 கூரை வீடுகளும் இடிந்து சேதமடைந்தன. மாவட்டம்பாடி-கப்பை செல்லும் சாலையில் மரம் ஒன்று சாலையின் குறுக்கே விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி தீயணைப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மரத்தை அகற்றினர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழையால் 32 அடி கொள்ளளவு கொண்ட வீடூர் அணையின் நீர்மட்டம் 27 அடியாக உயர்ந்தது. இந்த நிலையில் செஞ்சி, மேல்மலையனூர் பகுதியில் பெய்த தொடர் மழையால் அணைக்கு நேற்று காலை முதல் 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 27 அடியாக இருந்த வீடூர் அணையின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் 3 அடி உயர்ந்து, 30 அடியை எட்டியது. இன்னும் ஓரிருநாட்களில் அணை நிரம்பினால் அணையின் பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்படும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் நேற்று மாலை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை வீடூர் அணையை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு, பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் கூறுகையில், அணை நிரம்பும் நிலையில் உள்ளது. எனவே அணையில் இருந்து தண்ணீர் ஆற்றில் திறப்பதற்கு முன்பு கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடவேண்டும். அணைக்கு நீர்வந்து கொண்டிருப்பதால் அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து, பாதுகாப்பதோடு, சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்றார்.

பிரம்மதேசம் அடுத்த வடகோட்டிக்குப்பம், அரியந்தாங்கல் கிராமங்களில் 2 வீடுகள் இடிந்து சேதமானது. மாவட்டத்தில் உள்ள வீடூர் அணையின் நீர்மட்டமும் படிப்படியாக உயர்ந்து வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக கடந்த 2 நாட்களாக சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை பெரும்பாலானோர் நகர்புறங்களுக்கும், கடைவீதிகளுக்கும் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர். இதனால் விழுப்புரம், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி போன்ற முக்கிய நகர சாலைகள் அனைத்தும் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Next Story