கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம்


கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பிரசாரம் நாளை ஓய்கிறது - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம்
x
தினத்தந்தி 2 Dec 2019 5:00 AM IST (Updated: 2 Dec 2019 1:34 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 15 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் பகிரங்க பிரசாரம் நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) ஓய்கிறது. இதையொட்டி இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரம் காட்டியுள்ளனர்.

பெங்களூரு, 

குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ்-ஜனதாதளம்(எஸ்) கட்சிகளின் கூட்டணி ஆட்சி மீதான அதிருப்தியில் 15 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தனர்.

மேலும் 2 எம்.எல்.ஏ.க் கள் நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தனர். இதனால் கூட்டணி அரசு கவிழ்ந்தது. இதைதொடர்ந்து கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் 17 எம்.எல்.ஏ.க்களையும் தகுதி நீக்கம் செய்து அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து 17 தொகுதிகள் கர்நாடக சட்டசபையில் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் மஸ்கி, ராஜராஜேஸ்வரி நகர் தொகுதிகளில் கடந்த 2018-ம் ஆண்டு வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதை தவிர்த்து மீதமுள்ள அதானி, காக்வாட், கோகாக், எல்லாப்பூர், இரேகெரூர், ராணிபென்னூர், விஜயநகர், சிக்பள்ளாப்பூர், கே.ஆர்.புரம், யஷ்வந்தபுரம், மகாலட்சுமி லே-அவுட், சிவாஜி நகர், ஒசக்கோட்டை, கே.ஆர்.பேட்டை, உன்சூர் ஆகிய 15 தொகுதிகளுக்கு வருகிற 5-ந் தேதி (வியாழக்கிழமை) இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இந்த இடைத்தேர்தலில் போட்டியிட 248 வேட்பாளர்கள் 355 மனுக்களை தாக்கல் செய்தனர். சட்டப்படி இல்லாத 54 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 53 வேட்பாளர்கள் தங்களின் மனுக்களை வாபஸ் பெற்றனர். அது போக தற்போது, தேர்தல் போட்டியில் 165 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இதில் 156 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவார்கள்.

தொகுதி வாரியாக பார்த்தால், அதானி தொகுதியில் 8 வேட்பாளர்கள், காக்வாட்டில் 9 பேர், கோகாக்கில் 11 பேர், எல்லாப்பூரில் 7 பேர், இரேகெரூரில் 9 பேர், ராணிபென்னூரில் 9 பேர், விஜயநகரில் 13 பேர், சிக்பள்ளாப்பூரில் 9 பேர், கே.ஆர்.புரத்தில் 13 பேர், யஷ்வந்தபுரத்தில் 12 பேர், மகாலட்சுமி லே-அவுட்டில் 12 பேர், சிவாஜிநகரில் 19 பேர், ஒசக்கோட்டையில் 17 பேர், கே.ஆர்.பேட்டையில் 7 பேர், உன்சூரில் 10 பேர் இடைத்தேர்தல் களத்தில் உள்ளனர். இவற்றில் அதிகபட்சமாக சிவாஜிநகரில் 19 பேரும், குறைந்தபட்சமாக கே.ஆர். பேட்டையில் 7 பேரும் போட்டியில் உள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 319 பறக்கும் படைகள், 578 நுண்ணிய கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 8,326 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 8,186 கட்டுப்பாட்டு எந்திரங்கள், 7,876 வி.வி.பேட் எந்திரங்களும் (யாருக்கு வாக்களித்தோம் என்பதற்கான ஒப்புகை சீட்டு வழங்கும் எந்திரங்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

இந்த 15 தொகுதிகளில் வாக்களிக்க தகுதி படைத்தவர்கள் மொத்தம் 37 லட்சத்து 77 ஆயிரத்து 970 வாக்காளர்கள் ஆவர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 19 லட்சத்து 25 ஆயிரத்து 529 பேரும், பெண் வாக்காளர்கள் 18 லட்சத்து 52 ஆயிரத்து 27 பேரும் உள்ளனர். திருநங்கை வாக்காளர்களின் எண்ணிக்கை 414 ஆகும்.

வாக்காளர்கள் அடையாள அட்டையை காட்டி ஓட்டுப்போட வேண்டும். அடையாள அட்டை இல்லாதவர்கள், பாஸ்போர்ட் உள்பட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்களிக்க முடியும். இந்த 15 தொகுதிகளில் 4 ஆயிரத்து 185 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன. 22 ஆயிரத்து 958 அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

இந்த 15 தொகுதிகளில் பா.ஜனதா சார்பில் 13 தொகுதிகளில் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களும், சிவாஜிநகரில் தமிழரான எம்.சரவணா, ராணிபென்னூர் அருண்குமார் புஜார் ஆகியோரும் களம் இறக்கப்பட்டு உள்ளனர். காங்கிரஸ் புதிய முகங்களை களம் இறக்கியுள்ளது. குறிப்பாக காக்வாட் தொகுதியில் பா.ஜனதாவில் இருந்து விலகிய காங்கிரசில் சேர்ந்த ராஜூ காகே போட்டியிடுகிறார். கோகாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் லகன் ஜார்கிகோளியும், சிவாஜிநகரில் ரிஸ்வான் ஹர்ஷத் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி, யஷ்வந்தபுரத்தில் ஜவராயி கவுடா, கோகாக்கில் அசோக் பூஜாரி உள்ளிட்டோரை களம் இறக்கியுள்ளது. ஒசக்கோட்டையில் பா.ஜனதா வேட்பாளர் எம்.டி.பி.நாகராஜ் சுமார் ரூ.1,200 கோடி சொத்துக்கள் உள்ளது. பணக்கார வேட்பாளரான இவர், கூட்டணி அரசில் வீட்டு வசதித்துறை மந்திரியாக இருந்தவர். அந்த தொகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த பச்சேகவுடா எம்.பி.யின் மகன் சரத் பச்சேகவுடா சுயேச்சையாக போட்டியிட்டு, பா.ஜனதா, காங்கிரசுக்கு கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

இந்த இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இடைத்தேர்தல் முடிவு மாநில பா.ஜனதா அரசின் எதிர்காலத்தை நிர்ணயிக்க உள்ளதால், மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதனால் எடியூரப்பா அனைத்து தொகுதிகளில் 2 கட்ட பிரசாரத்தை நிறைவு செய்கிறார். அவர் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டுள்ளார்.

அவர் மட்டுமின்றி மந்திரிகள், பா.ஜனதா மாநில தலைவர் நளின்குமார் கட்டீல், மத்திய மந்திரிகள் சதானந்தகவுடா, பிரகலாத்ஜோஷி, சுரேஷ் அங்கடி உள்ளிட்டோரும் தேர்தல் பிரசார களத்தில் குதித்துள்ளனர். பா.ஜனதாவின் மாநில அளவிலான நிர்வாகிகளும் களத்தில் பம்பரமாய் சுழன்று வந்து வாக்கு சேகரித்து வருகிறார்கள்.

அதே போல் காங்கிரஸ் சார்பில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். அவர் தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை கடுமையாக தாக்கி பேசி வருகிறார். அவரது இந்த பேச்சு இடைத்தேர்தல் களத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. மேலும் மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், முன்னாள் மந்திரி டி.கே.சிவக்குமார் மற்றும் அக்கட்சியின் மாநில அளவிலான நிர்வாகிகள் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அதே போல் ஜனதா தளம்(எஸ்) சார்பில் அக்கட்சியின் தேசிய தலைவர் தேவேகவுடா, முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி மற்றும் முன்னாள் மந்திரிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்-மந்திரி எடியூரப்பா நேற்று பெலகாவியிலும், முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா கே.ஆர்.புரத்திலும், முன்னாள் பிரதமர் தேவேகவுடா யஷ்வந்தபுரத்திலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி கோகாக்கிலும் தங்கள் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினர்.

தற்போது இடைத்தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. பகிரங்க பிரசாரம் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த இடைத்தேர்தலில் ஆளும் பா.ஜனதா பெரும்பான்மை பெற இன்னும் 6 தொகுதிகளில் கட்டாயம் வெற்றி பெற்றே தீரவேண்டும் இல்லாவிட்டால் அக்கட்சி மெஜாரிட்டியை இழந்து ஆட்சியை பறிகொடுத்துவிடும் நிலை உள்ளது. தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களை தோற்கடிக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) ஆகிய இரு கட்சிகளும் தீவிரமாக களம் இறங்கியுள்ளதால், தகுதிநீக்க எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக மக்கள் திரும்பிவிடுவார்களோ என்று பா.ஜனதா சற்று பீதியடைந்துள்ளது.

Next Story