கோபி அருகே, கோவிலுக்குள் புகுந்து உண்டியல் பணம் திருட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கோபி அருகே கோவிலுக்குள் புகுந்து உண்டியலில் இருந்த பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கடத்தூர்
கோபி அருகே உள்ள கொத்துக்காட்டில் மஞ்சமாகாளியம்மன் கோவில் உள்ளது. சின்னசாமி என்பவர் இந்த கோவிலில் பூஜை செய்து வருகிறார்.
அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை நாட்களில் அதிக அளவில் இந்த கோவிலுக்கு வந்து அம்மனை வணங்கிவிட்டு செல்வார்கள்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை செலுத்த குடத்தில் உண்டியல் போல் அமைத்து இருந்தார்கள். கோவிலை பூட்டும்போது இந்த உண்டியல் குடத்தை பூசாரி அம்மனின் கருவறையில் வைத்துவிட்டு செல்வது வழக்கம்.
இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு சின்னசாமி கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். மறுநாள் காலையில் பூஜை செய்வதற்காக வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் சின்னசாமி பதறி அடித்து உள்ளே சென்றார். அப்போது அம்மனின் கருவறையில் வைக்கப்பட்டு இருந்து உண்டியலில் இருந்த பணமும் மாயமாகி இருந்தது. யாரோ மர்ம நபர்கள் கதவின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து உண்டியல் பணத்தை திருடி சென்றிருந்தனர். ஆனால் உண்டியலில் குறைந்த அளவு ரூபாயே இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சின்னசாமி கடத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story