மாவட்ட செய்திகள்

ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளியில் தங்கவைப்பு + "||" + Heavy rains in Rameswaram: Because homes are surrounded by water 200 put in government school

ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளியில் தங்கவைப்பு

ராமேசுவரத்தில் பலத்த மழை: வீடுகளை தண்ணீர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளியில் தங்கவைப்பு
ராமேசுவரத்தில் பலத்த மழை காரணமாக வீடுகளை தண்ணீ்ர் சூழ்ந்ததால் 200 பேர் அரசு பள்ளிக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
ராமேசுவரம்,

ராமேசுவரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

தங்கச்சிமடத்தில் பலத்த மழையால் ராஜாநகர், ராஜீவ்காந்திநகர், அய்யன்தோப்பு பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளை மழைவெள்ளம் சூழ்ந்தது. அது போல் அந்த பகுதிக்கு செல்லும் சாலையும் மழை நீரால் முழுமையாக மூழ்கி போனது.

வீடுகளை மழை வெள்ளம் அதிக அளவில் சூழ்ந்ததால் ராஜாநகர் மற்றும் ராஜீவ்காந்தி நகர் பகுதியை சேர்ந்த 70 குடும்பத்தை சேர்ந்த 200 பேர் தங்கச்சிமடத்தில் உள்ள அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ், டாக்டர் மணிகண்டன் எம்.எல்.ஏ. ஆகியோர் சென்று சந்தித்து பேசினர். அவர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை போன்றவற்றை வழங்கினர். மேலும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் தண்ணீரை வடிய வைக்கும் பணிைய விரைவுபடுத்துமாறும் அறிவுறுத்தினர். மேலும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும் பார்வையிட்டனர்.

இதுகுறித்து கலெக்டர் வீரராகவ ராவ் கூறியதாவது:-

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துள்ளது. குறிப்பாக ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் போன்ற பகுதிகளில் அதிக அளவில் மழை பெய்துள்ளது. இதனால் இந்த பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழை வெள்ளம் தேங்கி நிற்கிறது. குறிப்பாக ராஜீவ்காந்தி நகர், அய்யன்தோப்பு பகுதியில் உள்ள வீடுகளுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது.

இதையடுத்து அப்பகுதி மக்கள் தங்கச்சிமடம் அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, மருத்துவ வசதி போன்றவற்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பகுதியில் தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை மண்டபம் பகுதியில் வீசிய சூறை காற்றில் பல படகுகள் சேதமடைந்துள்ளன.

இதுகுறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. அதன் பின்னர் பாதிக்கப்பட்ட படகுகளுக்கு அரசின் நிவாரணம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கலெக்டருடன் கூடுதல் கலெக்டர் பிரதீப்குமார், துணை கலெக்டர் சுகபுத்ரா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் கேசவதாசன், தாசில்தார் அப்துல் ஜப்பார், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் கயிலைநாதன் உள்பட அலுவலர்களும் உடன் சென்றிருந்தனர்.

பாம்பன் சின்னப்பாலம், அக்காள்மடம், தரவைத்தோப்பு உள்பட சில கிராமத்தை சேர்ந்த ஏராளமான வீடுகளையும் மழை வெள்ளம் சூழ்ந்தது.

இதனால் அந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

மேலும் அக்காள்மடத்திலிருந்து குந்துகால் விவேகானந்தர் மணி மண்டபம் செல்லும் சாலையை பல இடங்களில் மழை வெள்ளம் மூழ்கடித்தபடி கடந்து சென்றது. இதனால் அந்த வழியாக சென்ற அனைத்து வாகனங்களும் மழை நீரில் தத்தளித்தபடி சென்றன.

தரவைத்தோப்பு பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடமும் மழைநீரால் சூழப்பட்டுள்ளது.

பாம்பன் அக்காள்மடம், தரவைத்தோப்பு பகுதிகளில் சூழந்துள்ள மழை வெள்ளத்தை வெளியேற்ற சாலையின் குறுக்கே எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு மழை நீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதுபற்றி அக்காள்மடத்தை சேர்ந்த காமாட்சி என்பவர் கூறும் போது, “கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பாம்பனில் இது போன்று பெய்த தொடர் மழையால் சாலையை மழை வெள்ளம் மூழ்கடித்தபடி சென்றது. 30 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு தான் தொடர் மழையால் சாலை, வீடுகளை மழை வெள்ளம் அதிக அளவில் சூழ்ந்துள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்திகள்

1. பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரிப்பு
பலத்த மழையால் பூண்டி ஏரியின் நீர் மட்டம் 4 அடி அதிகரித்துள்ளது.
2. பெரியகுளம் பகுதியில் பலத்த மழை: அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன - போக்குவரத்து துண்டிப்பு
பெரியகுளம் பகுதியில் பெய்த பலத்த மழையால் அகமலை மலைப்பாதையில் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
3. புதுவையில் பலத்த மழை: 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது - பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
புதுவையில் பெய்த பலத்த மழையால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
4. விடிய விடிய கொட்டி தீர்த்த மழை, உப்பளம் விளையாட்டு மைதான சுற்றுச்சுவர் இடிந்தது
புதுச்சேரியில் விடிய விடிய பலத்த மழை கொட்டி தீர்த்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் புகுந்தது. மழையில் நனைந்த உப்பளம் விளையாட்டு மைதானத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.
5. கடலூரில் 2-வது நாளாக பலத்த மழை, குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
கடலூரில் 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.