என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுவிடுவார்கள் என்று கூறி சிறையில் இருந்து கோர்ட்டுக்கு செல்ல மறுத்து அடம் பிடித்த கைதி


என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுவிடுவார்கள் என்று கூறி சிறையில் இருந்து கோர்ட்டுக்கு செல்ல மறுத்து அடம் பிடித்த கைதி
x
தினத்தந்தி 1 Dec 2019 10:15 PM GMT (Updated: 1 Dec 2019 8:50 PM GMT)

என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுவிடுவார்கள் எனக்கூறி திருச்சி சிறையில் இருந்து கோர்ட்டுக்கு செல்ல மறுத்து கைதி அடம் பிடித்தார். மேலும், அவர் கண்ணாடி துண்டால் தனக்கு தானே உடலில் கிழித்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி,

திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை கைதிகள் அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு கோர்ட்டுக்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தப்படுவார்கள். இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் என்கிற வினோத்குமாரை சில நாட்களுக்கு முன்பு சங்கிலி பறிப்பு வழக்கில் திருச்சி கே.கே.நகர் போலீசார் கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்து இருந்தனர்.

கோர்ட்டுக்கு செல்ல மறுத்த கைதி

இந்த வழக்கு தொடர்பாக அவரை அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 29-ந் தேதி போலீசார் சிறைக்கு வந்தனர். அப்போது அவர், தான் வெளியே வந்தால் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுவிடுவார்கள். அதனால் கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்று கூறி திடீரென அடம் பிடித்தார். பின்னர் கீழே கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து தனக்கு தானே உடலில் கிழித்து கொண்டார்.

சிறை மருத்துவமனையில் சிகிச்சை

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார், அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளித்தனர். பின்னர் அவரை சமாதானப்படுத்தி கோர்ட்டுக்கு அழைத்து சென்றனர். வினோத்குமார் மீது திருச்சி, அரியலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் குற்ற வழக்குகள் உள்ளதால் அவர் பயந்து கொண்டு கோர்ட்டுக்கு செல்ல மறுத்ததாக சிறை வட்டார தகவல்கள் தெரிவித்தன. திருச்சி சிறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story