கட்டப்பட்டு பல மாதங்களாகியும், பள்ளத்தூர் புதிய வாரச்சந்தை பயன்பாட்டுக்கு வராத நிலை - உடனடியாக திறக்க கோரிக்கை
காரைக்குடி அருகே பள்ளத்தூரில் புதிய வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு 6 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராததால், அதனை உடனடியாக திறக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காரைக்குடி,
காரைக்குடி அருகே உள்ளது பள்ளத்தூர் பேரூராட்சி. இங்கு சுமார் 20ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பஸ் நிலையத்திற்கு பின்புறம் வாரந்தோறும் வெள்ளிக் கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறும். இந்த வாரச்சந்தைக்கு அருகிலுள்ள புதுவயல், கொத்தரி, செட்டிநாடு, மணச்சை, கானாடுகாத்தான் உள்ளிட்ட பகுதிமக்கள் வந்து பொருட்களை வாங்கி செல்வார்கள். மேலும் இந்த வாரச்சந்தையில் கிராமப்புறத்தில் விளைந்த காய்கறிகளை நேரடியாக கொண்டு விற்பனை செய்வது வழக்கம். ஆனால் மழைக்காலத்தில் இந்த சந்தை மிகவும் பரிதாபமான நிலையில் இயங்கி வருகிறது. சமீபத்தில் இந்த பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக சந்தை முழுவதும் சேறும், சகதியுமாக காட்சியளிப்பதால், இங்கு வரும் பொதுமக்கள், வியாபாரிகள் என பலதரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளத்தூரை சேர்ந்த ரவி கூறும்போது, நூற்றாண்டை கடந்த இந்த சந்தைக்கு வாரந்தோறும் ஏராளமான மக்கள் வந்து செல்கின்றனர். மழைக்காலங்களில் இந்த சந்தை முழுவதும் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.
இதனால் பொருட்கள் வாங்கி செல்லும் பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்தநிலையில் இதன் அருகே ரூ.1 கோடி செலவில் புதிய வாரச்சந்தை கட்டிடம் கட்டப்பட்டு 6 மாதத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் இன்னும் திறக்கப்படவில்லை. தற்போது இந்த கட்டிடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டது. இரவில் இங்கு வந்து சிலர் குடித்து விட்டு காலி பாட்டில்களை அங்கேயே போட்டு விட்டு சென்று விடுகின்றனர். எனவே இதனை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
மேலும் இது குறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி செயல் அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:-
புதிய வாரச்சந்தையின் கட்டிட பணிகள் முற்றிலும் முடிவடைந்துவிட்டது. ரூ.1 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டதால் அவற்றை முதல்-அமைச்சர் காணொளிகாட்சி மூலம் திறக்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது. மேலும் இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்து கட்டிடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story