பெருங்களூர் கண்மாய் உடைப்பு; எம்.எல்.ஏ. ஆய்வு


பெருங்களூர் கண்மாய் உடைப்பு; எம்.எல்.ஏ. ஆய்வு
x
தினத்தந்தி 2 Dec 2019 4:00 AM IST (Updated: 2 Dec 2019 2:33 AM IST)
t-max-icont-min-icon

நயினார்கோவில் அருகே பெருங்களூர் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் அங்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நயினார்கோவில், 

பரமக்குடி தாலுகா நயினார்கோவில் பகுதியில் கடந்த பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பியுள்ளன. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக நயினார்கோவில் யூனியன் பெருங்களூர் கண்மாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் விவசாய நிலங்களிலும், குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து வெள்ளக்காடாக தேங்கி நிற்கிறது. அதைதொடர்ந்து அந்த பகுதி பொதுமக்கள் மண் மூடைகளை அடுக்கி உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகர் அங்கு சென்று பார்வையிட்டார். பின்பு அருகில் உள்ள மேலக்குளத்தூர், கொளுவூர், பாண்டியூர், பி.கொடிக்குளம் உள்பட 10-க்கும் மேற்பட்ட கண்மாய்களுக்கு சென்று ஆய்வு செய்தார்.

அப்போது பழுதடைந்த மடைகளை உடனடியாக சரி செய்யவும், கரைகளை கண்காணிக்கவும் தாசில்தாரிடம் வலியுறுத்தினார். எமனேசுவரம் பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாயில் தண்ணீர் தேங்கி நிற்பதாக எம்.எல்.ஏ.விடம் பொதுமக்கள் புகார் அளித்ததை தொடர்ந்து அவர் ஆணையாளரை நேரில் சந்தித்து உடனடியாக அதனை சரி செய்ய உத்தரவிட்டார்.

அவருடன் அ.தி.மு.க. நயினார்கோவில் ஒன்றிய செயலாளர் குப்புசாமி, பரமக்குடி தாசில்தார் சங்கர், சரயு ராஜேந்திரன், விவசாய அணி செயலாளர் பூமிநாதன், ஒன்றிய மாணவரணி செயலாளர் சத்தியேந்திரன், நயினார்கோவில் ராஜ்குமார் உள்பட பலர் உடன் சென்றனர்.

Next Story