283 இடங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதித்ததற்கு எதிர்ப்பு: ஓவேலி மக்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்


283 இடங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதித்ததற்கு எதிர்ப்பு: ஓவேலி மக்கள் கூட்டமைப்பினர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 9:03 PM GMT)

283 இடங்களில் கட்டிடங்கள் கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளதை கண்டித்து ஓவேலி மக்கள் கூட்டமைப்பினர் கூடலூரில் உண்ணா விரத போராட்டம் நடத்தினர்.

கூடலூர்,

நீலகிரி மாவட்டத்தில் 283 இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் கட்ட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதற்கு பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதை கண்டித்து கடந்த மாதம் 28-ந் தேதி அரசியல் கட்சிகள் சார்பில் முழு வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பின்னர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அரசியல் கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 15 நாட்களுக்குள் கோரிக்கைகள் குறித்து பரிசீலிப்பதாக உறுதி அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்காலிகமாக வேலை நிறுத்த போராட்டத்தை ஒத்திவைப்பதாக அரசியல் கட்சியினர் அறிவித்தனர். இந்த நிலையில் 283 இடங்களில் கட்டிடங்கள், வீடுகள் கட்ட தடை விதித்துள்ளதை கண்டித்தும், ஓவேலி பகுதியில் வாழும் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும். மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளை புனரமைக்கவும், ஓவேலி சோதனைச்சாவடி வழியாக கட்டுமான பொருட்களை எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும். 16 ஏ வனச்சட்டத்தால் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு தனியார் வன பாதுகாப்பு சட்டத்தில் இருந்து நீலகிரி மாவட்டத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓவேலி மக்கள் கூட்டமைப்பு சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் போலீசார் ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி அளித்தனர்.

இதை தொடர்ந்து கூடலூர் காந்தி திடலில் நேற்று ஓவேலி மக்கள் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்துக்கு கூட்டமைப்பு தலைவர் முருகையா தலைமை தாங்கினார். செயலாளர் சகாதேவன், பொருளாளர் இப்னு, பாபு, சிவக்குமாரன், ஜோனி, கண்மணி ஆகியோர் உள்பட பலர் முன்னிலை வகித்தனர். குஞ்சு முகமது வரவேற்றார். போராட்டத்தை கூடலூர் எம்.எல்.ஏ. திராவிடமணி தொடங்கி வைத்தார்.

பின்னர் தி.மு.க. நிர்வாகிகள் ராஜேந்திரன், லியாகத் அலி, காங்கிரஸ் நிர்வாகிகள் கோ‌ஷிபேபி, ‌ஷாஜி, அ.ம.மு.க. சையத் அனூப்கான், முஜிப்புர்ரகுமான், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு வாசு, பாஸ்கரன், இந்திய கம்யூனிஸ்டு பாலகிரு‌‌ஷ்ணன் உள்பட பலர் பேசினர். முடிவில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சின்னவர் நன்றி கூறினார். பின்னர் மாலை 5 மணிக்கு போராட்டம் நிறைவு பெற்றது.

Next Story