தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் ஏற்படவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி


தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் ஏற்படவில்லை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி
x
தினத்தந்தி 2 Dec 2019 4:30 AM IST (Updated: 2 Dec 2019 2:48 AM IST)
t-max-icont-min-icon

தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் ஏற்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை நகரில் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து மழை பெய்தது. இதனால் புதுக்கோட்டையில் உள்ள அடப்பன் குளம் நிரம்பி உள்ளது. இதைத்தொடர்ந்து அடப்பன்வயல் குளத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது கலெக்டர் உமா மகேஸ்வரி, திரைப்பட நடிகர் கருணாஸ் எம்.எல்.ஏ., நகராட்சி ஆணையர் சுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு அடப்பன் குளம் நிரம்பி வழிகின்றது. மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாகவே நீர் நிலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 25 லட்சம் மதிப்பில் மதகுகள் சரிசெய்யப்பட்டு பராமரிக்கப்பட்டதால் குளம் நிறைந்து தண்ணீர் வெளியேறுவதால் பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை. கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், தொற்று நோய்கள் ஏதும் ஏற்படவில்லை. தமிழகத்தில் தற்போது பெய்து வரும் மழையால் தொற்று நோய் இன்று (நேற்று ஞாயிற்றுக்கிழமை) வரை ஏற்படவில்லை.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை

நோய்த்தொற்று ஏற்படாத வண்ணம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றோம். தற்போது தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகின்றது. மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை அனைத்தும் தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. மருத்துவமனைகளில் மருந்து மாத்திரைகள் போதிய அளவு இருப்பு உள்ளது. மழைக்காலங்களில் பொதுமக்கள் காய்ச்சிய நீரை பருக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக பொன்னமராவதியில் 400 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.

உடைப்புகள் ஏதும் ஏற்படவில்லை

தொடர்ந்து கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளப்பட்டு உள்ளது. குறிப்பாக மணமேல்குடி பகுதியில் 2 இடங்களில் குடியிருப்பு பகுதியில் தண்ணீர் சூழ்ந்ததால் பொதுமக்களே தாமாக முன்வந்து பாதுகாப்பு மையத்தில் குடியேறி உள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும் இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் உடைப்புகள் ஏதும் ஏற்படவில்லை. அப்படி ஏற்பட்டாலும் அதை எதிர்கொள்ள போதுமான அளவு மணல் மூட்டைகள் இருப்பில் உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story