உள்ளாட்சி தேர்தல் தேதி ஓரிருநாளில் அறிவிக்கப்படலாம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்


உள்ளாட்சி தேர்தல் தேதி ஓரிருநாளில் அறிவிக்கப்படலாம் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தகவல்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:45 PM GMT (Updated: 1 Dec 2019 9:38 PM GMT)

உள்ளாட்சி தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம் என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி சிவகாசியில் நடைபெற்ற அரசு விழாவில் தெரிவித்தார்.

சிவகாசி, 

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் மக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை தொடர்ந்து அதில் தகுதி வாய்ந்த 801 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி சிவகாசி தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கண்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார் முன்னிலை வகித்தார். சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி 479 பேருக்கு முதியோர் ஓய்வு தொகைக்கான ஆணை, 166 பேருக்கு விதவை உதவித்தொகைக்கான ஆணை, 63 பேருக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதிய ஆணை, 31 பேருக்கு ஆதரவற்ற விதவைகளுக்கான ஓய்வூதிய ஆணை, 13 பேருக்கு கணவனால் கைவிடப்பட்டோருக்கான உதவித்தொகை, 8 பேருக்கு தேசிய மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைகான ஆணை, ஒருவருக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவி தொகை பெறுவதற்கான ஆணை, 40 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா என மொத்தம் 801 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழை மக்களுக்காகவே வாழ்ந்தார். அவர் ஆட்சி காலத்தில் தான் பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு அது செயல்படுத்தப்பட்டது. பல கோடி ஏழை மக்கள் அந்த திட்டங்கள் மூலம் இன்று வரை பயன்பெற்று வருகிறார்கள். முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சமூகநல திட்டங்கள் அறிவித்து அதனை செயல்படுத்தி வருகிறார். அரசு அறிவிக்கும் அனைத்து திட்டங்களை முறையாக செயல்படுத்த அதிகாரிகளால் மட்டுமே முடியும். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் ஏழை மக்கள் பிரச்சினையை போக்க கடுமையாக உழைத்து வருகிறார்கள். இவர்களுக்கு சமூக அக்கறை உள்ளது. மனித நேயம் உள்ள அதிகாரிகளால் இந்த மாவட்டம் முன்னோடி மாவட்டமாக இருக்கிறது. சட்டத்துக்கு உட்பட்ட என்னென்ன உதவிகள் மக்களுக்கு செய்ய முடியுமோ அத்தனை உதவிகளையும் இந்த அரசு மக்களுக்காக செய்யும். உள்ளாட்சி தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படலாம். அதனால் தான் இந்த நலதிட்ட உதவிகள் வழங்கும நிகழ்ச்சி விடுமுறை நாளில் மழை பெய்து கொண்டு இருக்கும் போதும் நடத்தப்படுகிறது. மக்கள் நலனில் அக்கறை கொண்டது இந்த அரசு.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் அ.தி.மு.க. பிரமுகர்கள் ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் வக்கீல் கணேசன், திருத்தங்கல் நகர செயலாளர் பொன்சக்திவேல், மேற்கு ஒன்றிய செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம், மாவட்ட மகளிரணி செயலாளர் சுடர்வள்ளி சசிக்குமார், ஆனையூர் ராஜசேகர், சித்துராஜபுரம் பாலாஜி, கோபாலன்பட்டி தெய்வம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story