எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், ரூ.10 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சுவர்


எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தில், ரூ.10 கோடியில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சுவர்
x
தினத்தந்தி 1 Dec 2019 10:30 PM GMT (Updated: 1 Dec 2019 9:58 PM GMT)

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் ரூ.10 கோடியில் அதி நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நேற்று பூமி பூஜையுடன் தொடங்கியது.

திருப்பரங்குன்றம்,

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ. 1,264 கோடியில் உலகத்தரம் வாய்ந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

இதன் முதற்கட்டமாக மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ21.20 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை நான்கு வழிச்சாலை மற்றும் இரு வழிச்சாலை அமைக்கும் பணி கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் கடந்த 23-ந் தேதி முதல் சுற்றுச்சுவருக்காக ரூ.10 கோடியில் 10 அடி உயரம் 12 அடி நீளம் கொண்ட கான்கிரீட்டிலான சிலாப்புகள் மற்றும் தூண்கள் தயாரிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில் சுமார் 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு சுற்றுச்சுவர் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணி நேற்று காலையில் பூமி பூஜையுடன் தொடங்கியது.

புதிதாக போடப்படும் நான்கு வழிச்சாலையின் கீழ் புறமாக சுமார் ஒன்றரை அடி இடையே எந்திரம் மூலம் சுமார் 5 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டு கான்கிரீட் தரைத்தளம் அமைக்கப்படுகிறது. மேலும் அதில் ஏற்கனவே தயாரான 12 அடி நீளம், 10 அடி உயரம் கொண்ட சிலாப்பு மற்றும் தூண்கள் பொருத்தப்பட்டு சுற்றுச்சுவர் எழுப்பும் பணி தொடங்கி நடந்து வருகிறது.

கண்காணிப்பு கேமரா மற்றும் மின்விளக்கு சாதனங்கள் பொருத்துவதற்கு வசதியாக துளைகள் உருவாக்கப்பட்டு அதிநவீன தொழில் நுட்பத்துடன் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

பணியை 6 மாதத்தில் முடிக்க திட்டமிடப்பட்டு அதிவேகமாக நடைபெற்று வருகிறது.

Next Story