குமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


குமரியில் மழை நீடிப்பு: திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு குளிக்க தடை விதித்ததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 1 Dec 2019 11:00 PM GMT (Updated: 1 Dec 2019 9:59 PM GMT)

குமரி மாவட்டத்தில் மழை நீடித்து வருவதால், திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவியில் குளிக்க தடை விதித்ததால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மதியம் தொடங்கிய மழை சிறிது நேரம் கூட இடைவெளி இன்றி சாரல் மழையாக விடிய, விடிய பெய்தது. நேற்று மதியம் 2 மணிக்கு மேல் லேசாக வெயில் அடித்தது. மழை காரணமாக பெரும்பாலான மக்கள் கையில் குடையை பிடித்தபடியே சாலையில் நடந்து சென்றனர். நாகர்கோவிலை பொறுத்த வரையில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது.

இதே போல அகஸ்தீஸ்வரம் பேரூராட்சிக்கு உள்பட்ட சமாதானபுரத்திலும் ரோடுகளில் தண்ணீர் தேங்கி நின்றது. சுமார் 3 அடி அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் ரோட்டில் வாகனங்கள் செல்ல இயலவில்லை. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. எனவே தண்ணீரை வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மழை அளவு

குமரி மாவட்டம் முழுவதும் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

நாகர்கோவில்-32.2, பூதப்பாண்டி-24.8, களியல்-8.6, கன்னிமார்-27.4, கொட்டாரம்-50.8, குழித்துறை-10.4, மயிலாடி-75.2, புத்தன்அணை-36.2, சுருளோடு-37.4, தக்கலை-10.1, குளச்சல்-3.8, இரணியல்-14.2, ஆரல்வாய்மொழி-20, கோழிப்போர்விளை-26, அடையாமடை-13, குருந்தன்கோடு-20.8, முள்ளங்கினாவிளை-9, ஆனைகிடங்கு-27.4, பாலமோர்-18.4 என்ற அளவில் மழை பதிவாகியிருந்தது.

இதுபோல அணை பகுதிகளில் பேச்சிப்பாறை-34.6, பெருஞ்சாணி-37.4, சிற்றார் 1-45.6, சிற்றார் 2-37, மாம்பழத்துறையாறு-26, பொய்கை-20, முக்கடல்-17 என்ற அளவில் மழை பெய்து இருந்தது.

பேச்சிப்பாறை அணை

மழை நீடித்து வருவதால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. அதிலும் குறிப்பாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. அதாவது பேச்சிப்பாறை அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 1173 கனஅடி மட்டுமே தண்ணீர் வந்தது. அது நேற்று அதிகரித்து 3043 கனஅடியாக உயர்ந்தது. இதே போல 218 கனஅடி தண்ணீர் வந்த பெருஞ்சாணி அணைக்கு 1074 கனஅடி தண்ணீர் வருகிறது.

மேலும் சிற்றார் 1 அணைக்கு 102 கனஅடியும், சிற்றார் 2 அணைக்கு 148 கனஅடியும், மாம்பழத்துறையாறு அணைக்கு 18 கனஅடியும் தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு தண்ணீர் அதிகமாக வருவதால் அணை வேகமாக நிரம்பி வருகிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 45 அடியாக இருந்தது. இதனால்அணையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது. நீர்வரத்துக்கு ஏற்ப அவ்வப்போது கூட்டியும், குறைத்தும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. அதோடு அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதுபோன்று மாம்பழத்துறையாறு அணையில் இருந்து 18 கனஅடியும், முக்கடல் அணையில் இருந்து 7 கனஅடியும் தண்ணீர் உபரியாக வெளியேற்றப்படுகிறது.

திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு

இந்த உபரிநீர் கோதையாறு வழியாக செல்வதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அருவியில் தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் விடுமுறை நாளான நேற்று அருவியில் குளிக்க வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும் அருவியின் அழகை கண்டு ரசித்தனர்.


Next Story