மாவட்ட செய்திகள்

தொடர்மழை எதிரொலி, மணிமுக்தாஅணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு + "||" + Continuous echo, The Manimukta Dam water level rises 5 feet overnight

தொடர்மழை எதிரொலி, மணிமுக்தாஅணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு

தொடர்மழை எதிரொலி, மணிமுக்தாஅணை நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்வு
தொடர்மழையால் மணிமுக்தா அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 5 அடி உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி அருகே அகரகோட்டலத்தில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையின் மொத்த கொள்ளளவு 36 அடியாகும். இந்த அணையின் மூலம் கானாங்குறிச்சி, வாணியந்தல், பெருவங்கூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் உள்ள சுமார் 4 ஆயிரத்து 500 ஏக்கருக்கு மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த அணைக்கு மழைக்காலங்களில் கல்வராயன்மலையில் இருந்து உற்பத்தியாகும் மணியாறு, முக்தாறுகளில் இருந்து தண்ணீர் வரும். மேலும் பாப்பாக்கல் ஓடையில் இருந்தும் மழைநீர் வரும். கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவுக்கு பெய்யாத காரணத்தால் மணிமுக்தாறு வறண்டது.

இதனால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டதால் பொதுமக்கள் பெரும் அவதி அடைந்தனர். ஆனால் இந்தாண்டு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தொடங்கியது. இந்த மழை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்து வந்தது. இதனால் நீர்வரத்து வரத்தொடங்கியதால் மணிமுக்தாஅணையின் நீர் மட்டம் மெல்ல மெல்ல உயர தொடங்கியது.

இந்த நிலையில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை பகுதியில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மணியாறு, முக்தாற்றில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியது. நேற்று முன்தினம் 22 அடியில் இருந்த மணிமுக்தா அணையின் நீர் மட்டம் நேற்று 27 அடியாக உயர்ந்தது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது.

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த ஆண்டு போதிய அளவுக்கு பருவமழை பெய்யாததால் அணை தண்ணீர் இன்றி வறண்டது. இதனால் நாங்கள் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்களுக்கு போதுமான அளவுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக பயிர்கள் தண்ணீரின்றி கருகியதால் எங்களுக்கு பெரும் ந‌‌ஷ்டம் ஏற்பட்டது. ஆனால் இந்தாண்டு பருவமழை ஒரளவுக்கு பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

தற்போது அணையின் நீர்மட்டம் 27 அடியை எட்டியுள்ளது. மேலும் மழை தொடர்ந்து பெய்தால் இன்னும் சில நாட்களில் அணை அதன் முழு கொள்ளளவை எட்டிவிடும் என தெரிகிறது. இதனால் இந்தாண்டு நெற்பயிர்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத சூழ்நிலை உருவாகி உள்ளதால் விவசாயிகள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.