பள்ளிக்கு கட்டிடம் கட்டக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


பள்ளிக்கு கட்டிடம் கட்டக்கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 3 Dec 2019 4:00 AM IST (Updated: 2 Dec 2019 7:51 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிகொண்டா அருகே பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டக்கோரி மாணவர்களுடன் பெற்றோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அணைக்கட்டு, 

பள்ளிகொண்டாவை அடுத்த ரஜாபுரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு 1–ம் வகுப்பு முதல் 5–ம் வகுப்பு வரை 67 மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர். தலைமை ஆசிரியை மற்றும் 3 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்த பள்ளி கட்டிடம் கட்டி 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஒரே கட்டித்தில் 67 மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். கட்டிடம் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு, எப்பொழுது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் மாணவ – மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை பள்ளிக்கு மாணவ – மாணவிகள் சென்றனர். அப்போது பள்ளி கட்டிடம் மிகவும் மோசமான நிலையில் இருந்ததை பார்த்த மாணவர்கள் வகுப்பறைக்கு செல்லாமல் வெளியில் இருந்தனர். இதைபார்த்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு சென்று இடிந்து விழும் நிலையில் உள்ள கட்டிடத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியை சித்ராவிடம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் கூறாததால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மாணவ–மாணவிகளுடன் ஒடுகத்தூர்–வேலூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர்கள் மதன்குமார், அண்ணாதுரை மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஞானசுந்தரி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 2 ஆண்டுகளாக புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை வைத்தோம். இதுநாள் வரையில் நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்று தெரிகிறது. தற்போது மழை பெய்து வருவதால் பள்ளி கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்று தெரியவில்லை. கழிவறையில் தண்ணீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். மேலும் சத்துணவில் வழங்கும் முட்டை கூட ஒரு தலைபட்சமாக வழங்கப்படுகிறது’ என்றனர்.

மாணவ–மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளதை அறிந்த மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பள்ளிக்கட்டிம் கட்ட டெண்டர் விடப்பட்டுள்து விரைவில் பள்ளிக்கட்டிம் கட்டும் பணி நடைபெறும் என்றும், அனைத்து மாணவ – மாணவிகளுக்கும் முட்டைகள் வழங்கப்படும். மேலும் தற்காலிகமாக தாங்கலில் உள்ள சமுதாய கூடத்தில் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

அதைத்தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story