அரக்கோணத்தில் பலத்த மழை: மரம் சாய்ந்து விழுந்து வாலிபர் பலி - 2 வீடுகளும் இடிந்தன
அரக்கோணத்தில் பலத்த மழையால் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் மரம் சாய்ந்து வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்,
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. தொடர்ந்து நேற்று காலையிலும் மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குண்டும், குழியுமான சாலைகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
மழையின் காரணமாக வளர்புரத்தை அடுத்த அருந்ததிபாளையத்தில் வசித்து வரும் ராமச்சந்திரன் என்பவரது கூரை வீடு இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.
இதேபோல தணிகைபோளூர் கிராமத்தை சேர்ந்த அம்மனியம்மாள் என்பவரது கூரை வீட்டின் சுவர் மட்டும் இடிந்து விழுந்தது. இதில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தாசில்தார் ஜெயக்குமார் சம்பவ இடங்களுக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அரிசி, மண்எண்ணெய், சேலை, வேட்டி வழங்கினார்.
இந்த நிலையில் அரக்கோணத்தில் இருந்து சித்தேரி செல்லும் சாலையில் அந்த பகுதியை சேர்ந்த சரண் (வயது 24) என்பவர் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது சாலையோரத்தில் இருந்த வேப்பமரம் வேரோடு சாய்ந்து சரண் மீது விழுந்தது.
இதில் காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அவர் சென்னை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதற்கிடையில் சாலையில் விழுந்த மரம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
Related Tags :
Next Story