தேர்தல் நடத்தை விதி அமல்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து


தேர்தல் நடத்தை விதி அமல்: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 3:55 PM GMT)

தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்ததால், கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

கரூர்,

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. இதையடுத்து கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இந்தநிலையில் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற இருந்தது. இதனால் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் மனுக்கள் அளிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனிடையே ஊரக உள்ளாட்சி உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் நேற்று நடைபெற இருந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதனால் பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிப்பதற்காக அலுவலக வளாகத்தில் பெட்டி வைக்கப்பட்டது. அதில் பொதுமக்கள் தங்களது மனுக்களை போட்டு விட்டு சென்றனர். இதற்கிடையே கலெக்டர் அலுவலகத்திற்கு வருகை தந்த மாவட்ட கலெக்டர் அன்பழகன், தேர்தல் முடிவுற்றபின் நடத்தை விதிகள் விலக்கி கொள்ளப்பட்டதும், இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு

கிரு‌‌ஷ்ணராயபுரம் மேலகாரதெரு சமூக ஆர்வலர் அமிர்தானந்தம் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிபாட்டில்களில் குளிர்பானத்தை ஊற்றி வைத்து அதனை மதுபாட்டில்களாக பாவித்து கையில் எடுத்து கொண்டு வந்து மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் டாஸ்மாக்கிற்கு எதிராக கண்டன கோ‌‌ஷங்களை எழுப்பியதால், அங்கு பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். பின்னர் பாட்டில்களை இங்கேயே வைத்து விட்டு மனுவை பெட்டியில் போட்டு வரும்படி அறிவுறுத்தினர். இதையடுத்து அவர்கள் அந்த மனுவை பெட்டியில் போட்டனர். அந்த மனுவில், கிரு‌‌ஷ்ணராயபுரம் பேரூராட்சி எல்லைக்கு உட்பட்ட பிச்சம்பட்டி செல்லும் சாலையில் சமீபத்தில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இங்கு மதுகுடிப்பவரால் அப்பகுதியில் பெண்கள், சிறுவர்-சிறுமிகள் ஆகியோர் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும் மதுகுடித்து விட்டு பெண்களை கேலி கிண்டல் செய்வதால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். இதையடுத்து பொதுமக்கள் அந்த டாஸ்மாக் கடை முன்பு முற்றுகை போராட்டம் நடத்தி எதிர்ப்பை காட்டியபோது அதனை பூட்டினர். எனவே அந்த டாஸ்மாக் கடையை ஊருக்க ஒதுக்குப்புறமாக வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாவட்ட செயலாளர் முல்லையரசு உள்ளிட்டோர் அளித்த மனுவில், கரூர் அருகேயுள்ள பாகநத்தம் ஊராட்சியில் சுற்றுவட்டார பகுதி மக்கள் பயன்பெறும் வகையில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர். முன்னதாக கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்காக வந்த அதிகாரிகள் சிலர், கூட்டம் ரத்து செய்யப்பட்டதை அறிந்ததும் அங்கிருந்து மீண்டும் தங்களது அலுவலகத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

Next Story