திருச்செந்தூரில் பலத்த மழைக்கு 12 வீடுகள் இடிந்து சேதம்


திருச்செந்தூரில் பலத்த மழைக்கு 12 வீடுகள் இடிந்து சேதம்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:00 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

திருச்செந்தூர் பகுதியில் பெய்த பலத்த மழைக்கு 12 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

திருச்செந்தூர், 

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், திருச்செந்தூர் ஆவுடையார்குளம் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த மறுகால் ஓடையை மூழ்கடித்தவாறு தண்ணீர் செல்வதால், நேற்று 2-வது நாளாக திருச்செந்தூர் பாரதியார் தெரு, காமராஜர் ரோடு, டி.பி. ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து நின்றது.

இதனால் அந்த வழியாக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தை வடிய வைக்கும் பணியில் நகர பஞ்சாயத்து பணியாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.

இதற்கிடையே பலத்த மழையின் காரணமாக திருச்செந்தூர் அருகே மத்திமான்விளையைச் சேர்ந்த செல்வபிலோமி, ஆலந்தலையைச் சேர்ந்த ஜோதி ஆகிய 2 பேரின் வீடுகள் முழுவதுமாக இடிந்து சேதம் அடைந்தன. மேலும் மத்திமான்விளையைச் சேர்ந்த சித்திரைகனி, தளவாய்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், உடன்குடி வடக்கூரைச் சேர்ந்த ஈசாக்கு, கல்விளையைச் சேர்ந்த வேலம்மாள், பாலதண்டாயுதம், ஆத்தூர் அருகே கீரனூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, பள்ளத்தூரைச் சேர்ந்த தங்கராஜ், தலைவன்வடலியைச் சேர்ந்த மாரிதேவி, ராணிமகராஜபுரத்தைச் சேர்ந்த கலைச்செல்வம், கோயில்விளையைச் சேர்ந்த காளிமுத்து ஆகிய 10 பேரின் வீடுகள் பகுதிளவு சேதம் அடைந்தன. மழைக்கு சேதம் அடைந்த வீடுகளை வருவாய் துறையினர் பார்வையிட்டு, நிவாரண உதவி வழங்க ஏற்பாடு செய்தனர்.

Next Story