தூத்துக்குடி ராஜூவ்நகரில் தேங்கி கிடக்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு


தூத்துக்குடி ராஜூவ்நகரில் தேங்கி கிடக்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் - கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 2 Dec 2019 10:15 PM GMT (Updated: 2 Dec 2019 5:10 PM GMT)

தூத்துக்குடி ராஜூவ்நகரில் தேங்கி கிடக்கும் மழைநீரை வெளியேற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர்.

தூத்துக்குடி, 

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி நேற்று காலையில் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளிப்பதற்காக அலுவலகத்தில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது. அந்த பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை அளித்து சென்றனர்.

தூத்துக்குடி ராஜூவ்நகர் 7 முதல் 10-வது தெரு வரை உள்ள பொதுமக்கள் தங்கள் மனுவை பெட்டியில் போட்டனர். அந்த மனுவில், எங்கள் பகுதியில் சாலை வசதி இல்லை. தொடர்ந்து பெய்து வரும் மழையால் எங்கள் தெருக்களில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. எனவே தெருக்களில் தேங்கி கிடக்கும் தண்ணீரை வெளியேற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

இந்திய மாணவர் சங்கத்தினரின் கோரிக்கை மனுவில், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை படி 5, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. மாணவர்களின் தற்கொலைக்கு தேர்வு முறை முக்கிய காரணம். எனவே மாணவர்களின் நலன் கருதி இந்த பொதுத்தேர்வு அறிவிப்பை அரசு திரும்ப பெற வேண்டும் என்று கூறி இருந்தனர்.

நாம் தமிழர் கட்சியினர் கோரிக்கை மனுவில், தூத்துக்குடியில் இயங்கி வரும் தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பள்ளியின் தரத்தை உயர்த்துவதற்காக மாணவர்களை இரவு 8 மணி வரை பள்ளியில் வைத்து பாடம் நடத்துகிறார்கள். இதனால் மாணவர்கள் தவறான முடிவுகளை எடுக்கிறார்கள். எனவே இதனை மாவட்ட கல்வி அலுவலர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

சாத்தான்குளம் பேய்க்குளம் ஸ்ரீவெங்கடேசுவரபுரத்தை சேர்ந்த மூக்கன் மற்றும் அந்த பகுதி பொதுமக்கள் பலர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் அளித்த மனுவில், சில நாட்களுக்கு முன்பு எங்கள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தால், புகாரை வாங்க மறுத்தனர். எனவே அரசு பணியை தவறாக பயன்படுத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.

Next Story