பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது - பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என அதிகாரிகள் தகவல்


பூண்டி, புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வருகிறது - பொதுமக்கள் அச்சப்படதேவையில்லை என அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 2 Dec 2019 10:30 PM GMT (Updated: 2 Dec 2019 5:55 PM GMT)

பருவ மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய 3 ஏரிகளுக்கு தலா 2 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் எந்த ஏரியும் நிரம்பும் நிலையில் இல்லை என்பதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அதிகாரிகள் கூறினார்கள்.

சென்னை,

சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளில் இருந்து தண்ணீர் பெறப்படுகிறது. இந்த ஏரிகளுக்கு நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை மூலம் தண்ணீர் பெறுவதே பிரதானமாக உள்ளது. அத்துடன் பூண்டி ஏரிக்கு ஆந்திர மாநிலத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பெறப்படும் கிருஷ்ணா நதிநீர் கூடுதலாக வருகிறது.

இங்கிருந்து சென்னை மாநகரத்தின் குடிநீர் தேவைக்காக சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் பூண்டி ஏரிக்கு பெறப்படும் தண்ணீர் கடந்த 2 வாரங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் நடப்பாண்டு தேவைக்கு ஏரிகளின் நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழை மூலம் கிடைக்கும் தண்ணீரை நம்பி தான் இருக்க வேண்டும் என்ற நிலை உருவானது.

கடந்த மாதம் 28-ந்தேதியில் இருந்து திருவள்ளூர், காஞ்சீபுரம் மற்றும் சென்னைப் புறநகர் பகுதிகளில் பருவ மழை தீவிரமடைந்தது. குறிப்பாக இப்பகுதிகளில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதன் மூலம் ஏரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் போதுமான அளவு மழை பெய்து வருவதால் ஏரிகளின் நீர் மட்டம் சற்று உயர்ந்து வருகிறது. ஏரிகளில் இருந்து குடிநீர் தேவைக்காகவும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. ஏரிகள் இருக்கும் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது.

இதுகுறித்து சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

சென்னை புறநகர் உள்ளிட்ட சுற்றுவட்டத்தில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் மூலம் பூண்டி, சோழவரம், புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளுக்கு போதிய அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. தொடர்ந்து மழை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது. குறிப்பாக பூண்டிக்கு கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தண்ணீர் நிறுத்தப்பட்டதால், இந்த கால்வாய்கள் மூலம் அப்பகுதியில் பெய்யும் மழை நீர் வந்து கொண்டு இருக்கிறது.

குறிப்பாக நேற்றைய நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,229 மில்லியன் கன அடி தண்ணீரும், சோழவரத்தில் 131, புழலில் 1,818 மற்றும் செம்பரம்பாக்கம் ஏரியில் 913 மில்லியன் கன அடி உட்பட 4 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி (4.4 டி.எம்.சி.) தண்ணீர் வந்து உள்ளது.

குடிநீர் தேவைக்காக நேற்று பூண்டியில் இருந்து 165 கன அடியும், சோழவரத்தில் இருந்து 35 கன அடி, புழலில் இருந்து 89 கன அடி, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 25 கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டது. பூண்டி ஏரிக்கு 2 ஆயிரத்து 925 கன அடியும், புழல் ஏரிக்கு 2 ஆயிரத்து 161 கன அடியும், செம்பரம்பாக்கத்திற்கு 1,923 கன அடி வீதம் தண்ணீர் உள்ளே வருகிறது. சராசரியாக சோழவரம் தவிர்த்து மற்ற 3 ஏரிகளுக்கு தலா 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வருகிறது.

ஆனால் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி, சோழவரம் 1,081 மில்லியன் கன அடி, புழல் 3 ஆயிரத்து 300 மில்லியன் கன அடி, செம்பரம்பாக்கம் 3 ஆயிரத்து 645 மில்லியன் கன அடி ஆக மொத்தம் 4 ஏரிகளிலும் சேர்த்து 11 ஆயிரத்து 257 மில்லியன் கன அடி தண்ணீர் சேமிக்க முடியும். ஆனால் தற்போது 4 ஆயிரத்து 91 மில்லியன் கன அடி மட்டுமே இருப்பு உள்ளது. அதாவது 3-ல் 1 பங்கு மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் எந்த ஏரியும் நிரம்பும் நிலையில் இல்லை. இதனால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை.

பூண்டி நீர் பிடிப்பு பகுதிகளில் 743 மில்லி மீட்டரும், சோழவரத்தில் 98 மி.மீ., புழலில் 82 மி.மீ., செம்பரம்பாக்கத்தில் 93 மி.மீ., என்ற அளவில் மழை பெய்தது. ஊத்துக்கோட்டை அருகில் உள்ள கிருஷ்ணா நதி நீர் வரும் நுழைவு பகுதியில் 47 மி.மீ., கொரட்டூர் அணைக்கட்டு பகுதியில் 81 மி.மீ., தாமரைப்பாக்கம் ஏரியில் 77 மி.மீ. என்ற அளவில் மழை பெய்தது.

பருவ மழை காரணமாக 4 ஏரிகளிலும் தற்போது 4.091 டி.எம்.சி. இருப்பு உள்ளது. சென்னை மாநகருக்கு மாதம் ஒரு டி.எம்.சி. வீதம் குடிநீர் தேவைப்படுகிறது. அந்தவகையில் தற்போது இருப்பது 4 மாதங்களுக்கு தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

அத்துடன் கூடுதலாக கிருஷ்ணா நதி நீர் திட்டத்தின் மூலம் 2 டி.எம்.சி. தண்ணீர் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளனர். எப்படியும் இந்த பருவ மழை காலத்தில் 7 டி.எம்.சி. வரை தண்ணீர் சேமிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. வரும் கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் இருப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அதிகாரிகள் கூறினார்கள்.

Next Story