கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு


கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்த முதியவர் திருவாரூரில் பரபரப்பு
x
தினத்தந்தி 2 Dec 2019 11:00 PM GMT (Updated: 2 Dec 2019 6:53 PM GMT)

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு முதியவர் மண்எண்ணெய் பாட்டிலுடன் மனு அளிக்க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஜெகபர் அலி (வயது 67). இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சோதனை செய்த போது அவருடைய பையில் மண்எண்ணெய் பாட்டில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் நான் கட்டிய வீடு எனது மனைவி பெயரில் உள்ளது. அவர், என் விருப்பத்திற்கு மாறாக எனது மகள் பெயருக்கு அந்த வீட்டை எழுதி கொடுத்து விட்டார். இதனால் ஏற்பட்ட பிரச்சினையில் என்னை வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதற்கு மறுப்பு தெரிவித்ததால் எனது மகள் வழியில் சிலர் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர்.

மண்எண்ணெய் பாட்டில்

எனது உயிருக்கு ஆபத்தான நிலை ஏற்பட்டதால் செய்வது அறியாமல் மண்எண்ணெய் பாட்டிலுடன் பாதுகாப்பு கேட்டு மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்ததாக தெரிவித்தார். இதனையடுத்து அவர், கூத்தாநல்லூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அவருடைய குடும்பத்தினருடன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மண்எண்ணெய் பாட்டிலுடன் முதியவர் மனு கொடுக்க வந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story