ஆந்திராவிற்கு காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்: சட்டவிரோதமாக மது விற்ற - 7 பேர் கைது


ஆந்திராவிற்கு காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்கள் பறிமுதல்: சட்டவிரோதமாக மது விற்ற - 7 பேர் கைது
x
தினத்தந்தி 3 Dec 2019 3:45 AM IST (Updated: 3 Dec 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திராவிற்கு சொகுசு காரில் கடத்த முயன்ற மதுபாட்டில்களை காருடன் பறிமுதல் செய்த போலீசார், அப்பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்களை விற்பனை செய்ததாக 7 பேரையும் கைது செய்தனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் ஜானகிராமன் தலைமையில் போலீசார் எளாவூரில் உள்ள நவீன ஒருங்கிணைந்த சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது தமிழ்நாட்டில் இருந்து ஆந்திரா நோக்கிச்சென்ற சொகுசு காரை ஓட்டி வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் திடீரென காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார்.

அதன் பின்னர், போலீசார் சென்று அந்த வாகனத்தை சோதனை செய்தபோது, அதில் இருந்த அட்டை பெட்டி ஒன்றில் டாஸ்மாக் மதுபாட்டில்கள் இருப்பது தெரிய வந்தது. அவற்றை ஆந்திராவிற்கு கடத்தி செல்ல முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து காருடன் மதுபாட்டில்களை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், அதே பகுதியில் தொடர்ந்து சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக நாகராஜகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர்(வயது 42), அப்பாவரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ்(41), பிரகாஷ்(37), மாதர்பாக்கம் வினாயகநகரை சேர்ந்த வெங்கடேஷ்(45), மதுரை மேலூர் அடுத்த கீழவளவு கிராமத்தை சேர்ந்த பாக்கியநாதன்(49), கும்மிடிப்பூண்டி மணியக்காரத் தெருவை சேர்ந்த ராம்குமார்(35) மற்றும் காட்டுக்கொல்லைத் தெருவைச் சேர்ந்த நற்குணன்(47) ஆகிய 7 பேரை போலீசார் மடக்கி பிடித்தனர். இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து 182 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

Next Story